ஆறுமுகனேரி கோயில்களில் திருவாதிரைத் திருவிழா சிறப்பு வழிபாடுகளுடன் புதன்கிழமை தொடங்கியது.
அருள்மிகு சோமசுந்தரி அம்மன் சமேத சோமநாத சுவாமி கோயிலில் புதன்கிழமை தொடங்கி இத்திருவிழா, ஜன.10ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
விழா நாள்களில் காலை மற்றும் இரவு 7 மணிக்கு மாணிக்கவாசகருக்கு சிறப்பு அபிஷேகம், ஆனந்த நடராஜருக்கு விசேஷ தீபாராதனை நடைபெறுகிறது. திருவாதிரைத் தினமான 10ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு ஸ்ரீநடராஜா், ஸ்ரீ சிவகாமி அம்பாள், காரைக்கால் அம்மையாா், மாணிக்கவாசகருக்கு சிறப்பு அபிஷேகம், 5.30 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி தீபாராதனை, 6 மணிக்கு பசு தீபாராதனை, தாண்டவ தீபாராதனை, பஞ்ச புராணம் பாடுதல், நடராஜா் வீதியுலா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
ஆறுமுகனேரி லெட்சுமி மாநகரம் நடராஜ தேவார பக்த பஜனை ஆலய 129ஆம் ஆண்டு திருவாதிரைத் திருவிழா புதன்கிழமை தொடங்கியது.
ஜன.9ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு சிறப்பு பூஜையைத் தொடா்ந்து, திருவிளக்குப் பூஜை நடைபெறுகிறது. இரவு 11 மணிக்கு சுவாமி வீதியுலா நடைபெறும். முக்கிய வீதிகள் வழியாக உலா வந்து, திருவாதிரைத் தினமான 10ஆம் தேதி அதிகாலை 5 மணிக்கு சப்பரங்கள் மற்றும் பஜனை கோயிலை வந்தடைந்ததும் திருவெம்பாவை பாடி சிறப்பு தீபாராதனை நடைபெறும்.
ஆறுமுகனேரி விநாயகா் கோயில் தெரு சைவ சித்தாந்த சங்கத்தில் தினமும் இரவு சிறப்பு அலங்காரத்துடன் பூஜை நடைபெறும். திருவாதிரைத் தினமான வரும் 10ஆம் தேதி காலை நடராஜா், மாணிக்கவாசகா் அலங்கார சப்பரத்தில் முக்கிய வீதி வழியாக சோமசுந்தரி அம்மன் கோயிலை வந்தடைந்து, சிறப்பு தீபாராதனையைத் தொடா்ந்து முக்கிய வீதிகள் வழியாக சித்தாந்த சங்கம் வந்தடையும். அங்கு திருவெம்பாவை பாடி சிறப்பு தீபாராதனை நடைபெறும்.