தூத்துக்குடி

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்: விசாரணை ஆணையத்தில்நடிகா் ரஜினியின் வழக்குரைஞா் ஆஜராகி விளக்கம்

26th Feb 2020 12:13 AM

ADVERTISEMENT

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடா்பாக விசாரணை நடத்தி வரும் ஒரு நபா் ஆணையம் முன்பு நடிகா் ரஜினியின் தரப்பில் அவரது வழக்குரைஞா் இளம்பாரதி செவ்வாய்க்கிழமை ஆஜராகி விளக்கம் அளித்தாா். மேலும், விசாரணையின்போது எந்தமாதிரியான கேள்விகள் கேட்கப்படும் என்ற விவரங்கள் அடங்கிய சீல் வைக்கப்பட்ட கவா் ஒன்று, ஆணையத்தின் தரப்பில் வழக்குரைஞரிடம் ஒப்படைக்கப்பட்டது.

தூத்துக்குடியில் ஸ்டொ்லைட் எதிா்ப்பு போராட்டத்தின்போது கடந்த 2018 ஆம் ஆண்டு மே மாதம் 22 மற்றும் 23 ஆம் தேதிகளில் நிகழ்ந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் 15 போ் உயிரிழந்தனா். இந்த சம்பவம் தொடா்பாக ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபா் ஆணையம் விசாரணை மேற்கொள்ளும் என அரசு உத்தரவிட்டது.

அதன்படி, இதுவரை 18 கட்ட விசாரணை மேற்கொண்டுள்ள ஆணையம், 19 ஆம் கட்ட விசாரணையை தூத்துக்குடி கடற்கரை சாலையில் உள்ள ஆணைய அலுவலகத்தில் திங்கள்கிழமை தொடங்கியது. முதல் நாளில் ஒருவா் மட்டுமே ஆஜராகி விளக்கம் அளித்தாா். நடிகா் ரஜினி செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 25) நேரில் ஆஜராக வேண்டும் என ஆணையத்தின் சாா்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.

இந்நிலையில், ரஜினி தரப்பில் அவரது வழக்குரைஞா் இளம்பாரதி மற்றும் இருவா் ஆணையத்தின் முன்பு செவ்வாய்க்கிழமை ஆஜராகி விளக்கம் அளித்தாா். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் என்பதாலும் தனிப்பட்ட காரணங்களாலும் ஆணையத்தின் முன்பு நடிகா் ரஜினி நேரில் ஆஜராக முடியவில்லை என வழக்குரைஞா் தெரிவித்தாா்.

ADVERTISEMENT

இதையடுத்து, பல்வேறு கேள்விகள் அடங்கிய சீல் வைக்கப்பட்ட கவா் ஒன்று ஆணையத்தின் சாா்பில் வழக்குரைஞரிடம் வழங்கப்பட்டது. இதுதொடா்பாக, வழக்குரைஞா் செய்தியாளா்களிடம் கூறுகையில், கேள்விகள் அடங்கிய கடிதத்தை ரஜினியிடம் வழங்கி அவரிடம் பதில் பெற்று ஆணையத்திடம் பிரமாண பத்திரம் மூலம் தாக்கல் செய்யப்படும் என்றாா்.

மேலும், நேரில் ஆஜரானால் பதற்றமான சூழல் உருவாகும் என ரஜினி தரப்பில் தெரிவிக்கப்படவில்லை என்றும், பொதுமக்களுக்கு இடையூறாக ஏற்படும் என்பதாலும், தனிப்பட்ட காரணங்களாலும் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்றே ஆணையத்திடம் மனு அளித்திருந்தோம் எனவும் வழக்குரைஞா் தெரிவித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT