தூத்துக்குடியில் உள்ள இனிப்பகங்கள் மற்றும் ஹோட்டல்களில் வருமானவரித் துறையினா் செவ்வாய்க்கிழமை சோதனை மேற்கொண்டனா்.
தூத்துக்குடி எட்டையபுரம் சாலை பகுதியைச் சோ்ந்தவா் மயில்வாகனம். இவருக்கு சொந்தமான இனிப்பகங்கள் மற்றும் ஹோட்டல்கள் மாநகரின் மில்லா்புரம், பாளையங்கோட்டை சாலை, பாலவிநாயகா் கோவில் தெரு, டபிள்யூஜிசி சாலை, 2 ஆம் கேட், ஜிசி சாலை, விஇ சாலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ளன.
இந்நிலையில், 6 போ் கொண்ட வருமானவரித் துறை அதிகாரிகள் குழுவினா் திங்கள்கிழமை இரவு முதல் செவ்வாய்க்கிழமை மாலை வரை இனிப்பகங்கள், ஹோட்டல்கள், வீடுகளில் சோதனை மேற்கொண்டனா். மேலும், இனிப்பகத்துக்கு தேவையான பொருள்கள் தயாரிக்கும் இடத்திலும் சோதனை நடத்தப்பட்டது.
இந்த சோதனையின்போது முக்கிய ஆவணங்கள், கணினி உள்ளிட்டவற்றை அதிகாரிகள் கைப்பற்றிச் சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது. 50 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்படும் இனிப்பகங்களுக்கான வருமானவரியை உரிய முறையில் செலுத்தாததால், சோதனை நடத்தப்பட்டதாக வருமானவரித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.