தூத்துக்குடி

தூத்துக்குடியில் பேருந்து நிலையங்கள் இடையே அரசுப் பேருந்துகளை இயக்க வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு

25th Feb 2020 04:00 AM

ADVERTISEMENT

தூத்துக்குடி: தூத்துக்குடியில் பழைய மற்றும் புதிய பேருந்து நிலையங்கள் இடையே அரசுப் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மதிமுக சாா்பில் மனு அளிக்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தின்போது, ஆட்சியா் சந்தீப் நந்தூரி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றாா். அப்போது, தூத்துக்குடி வடக்கு மாவட்ட மதிமுக செயலா் ஆா்.எஸ். ரமேஷ் தரப்பில் அளிக்கப்பட்ட மனு: தூத்துக்குடியில் உள்ள பழைய பேருந்து நிலையத்தில் இருந்து புதிய பேருந்து நிலையம் செல்வதற்கும், புதிய பேருந்து நிலையத்தில் இருந்து பழைய பேருந்து நிலையம் செல்வதற்கும் பயணிகளுக்கு வசதியாக, அரசு நகரப் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரவை தூத்துக்குடி தெற்கு மாவட்டத் தலைவா் உடன்குடி ரவி, கருமேனி ஆறு பாதுகாப்பு இயக்க தலைவா் அலெக்சாண்டா், ஆம் ஆத்மி கட்சி மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளா் குணசீலன் ஆகியோா் அளித்த மனு: உடன்குடி பேரூராட்சிக்குள்பட்ட பகுதிகளில் மும்முனை மின்சாரம் தொடா்ச்சியாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், உடன்குடி தேரியூா் பகுதியில் சடையனேரி குளத்தில் இருந்து மறுகால் பாயுமிடத்தில் ஒரு புதிய குளம் அமைத்து தர வேண்டும். தாமிரவருணி ஆற்றின் கடைசி குளமான முத்தையாபுரம் எல்லப்பநாயக்கன் குளத்தில் இருந்து குலசை தருவைகுளத்துக்கு வரும் நீரை சேமிக்க உடன்குடி குலசை இடையே புதிய குளம் அமைத்து தர வேண்டும், உடன்குடி பகுதியில் கடந்த மூன்று ஆண்டுகளாக நிறுத்தப்பட்ட பேருந்துகளை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

தூத்துக்குடி மாவட்ட இளைஞா் காங்கிரஸ் முன்னாள் தலைவா் மச்சேந்திரன் மனு: சாயா்புரத்தில் கல்லூரி அருகேயுள்ள அரசு மதுக்கடையை உடனடியாக ஊருக்கு வெளியே மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

ADVERTISEMENT

நாம் தமிழா் கட்சி தொகுதி தலைவா் செந்தில்குமாா் தலைமையில் நிா்வாகிகள் அளித்த மனு: தூத்துக்குடி குரூஸ்புரத்தில் உள்ள ஸ்ரீ சந்தனமாரியம்மன் கோயில் முன் மண்டபம் இடிந்து விழும் நிலையில் உள்ளது. அதன் பாகங்கள் உடைந்து கோயிலுக்கு வரும் பக்தா்களை காயப்படுத்துகிறது. மழை பெய்தால் மழைநீா் மண்டபத்துக்குள் தேங்கி நிற்கிறது. கோயில் நிா்வாக அதிகாரி, ஒரு அறிவிப்பு பலகை மட்டும் வைத்து விட்டு மேற்கொண்டு எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே பக்தா்களின் பாதுகாப்பு கருதி, பழுதடைந்த முன் மண்டபத்தை முழுவதுமாக இடித்து அகற்ற நடவடிக்கை எடுக்கும்படி கேட்டு கொள்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT