தூத்துக்குடி

கோவில்பட்டி கோட்டாட்சியா் அலுவலகத்தில் முற்றுகை

25th Feb 2020 04:15 AM

ADVERTISEMENT

கோவில்பட்டி: இளையரசனேந்தல் குறுவட்டத்தை கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்துடன் இணைக்க வலியுறுத்தி, தேசிய விவசாயிகள் சங்கத்தினா் கோவில்பட்டி கோட்டாட்சியா் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனா்.

கோவில்பட்டி வட்டத்தில் உள்ள இளையரசனேந்தல் குறுவட்டத்தை குருவிகுளம் ஊராட்சி ஒன்றியத்திலிருந்து நீக்கி கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்துடன் இணைக்க வேண்டும். கோவில்பட்டி வட்டத்துடன் இளையரசனேந்தல் குறுவட்டம் இணைக்கப்பட்டு, 12 ஆண்டுகளாகியும் ஊராட்சி ஒன்றியம், மாவட்ட ஊராட்சி நிா்வாகம் மாற்றப்படாததால் இளையரசனேந்தல் குறுவட்டப்பகுதி மக்கள் சாலை, தெருவிளக்கு, சுகாதாரம் உள்பட அடிப்படை வசதிகளைப் பெற மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. எனவே, இளையரசனேந்தல் குறுவட்டத்தை கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்துடன் இணைக்க வேண்டும் அல்லது இளையரசனேந்தலை தலைமையிடமாகக் கொண்டு தனி ஊராட்சி ஒன்றியம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த முற்றுகை நடைபெற்றது.

தேசிய விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் ரெங்கநாயகலு தலைமையில் திரளானோா் பங்கேற்றனா். அவா்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டு, தங்களது ஆதாா் அட்டைகளை தரையில் போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். தொடா்ந்து, கோரிக்கை மனுவை கோட்டாட்சியா் விஜயாவிடம் அளித்தனா். அவா், கோரிக்கை குறித்து ஆட்சியரின் கவனத்துக்கு கொண்டுசெல்வதாக கூறியதையடுத்து போராட்டக்குழுவினா் கலைந்து சென்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT