தூத்துக்குடி

தூத்துக்குடி துறைமுகத்துக்கு வந்த சீன சரக்கு கப்பல் திருப்பி அனுப்பி வைப்பு

16th Feb 2020 11:13 PM

ADVERTISEMENT

சீனாவில் இருந்து மாலுமிகள் உள்பட 21 பேருடன் வந்த சரக்கு கப்பல் மருத்துவத் துறையினா் ஆய்வுக்கு பின்னா் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை திருப்பி அனுப்பி வைக்கப்பட்டது.

பனாமா நாட்டில் பதிவு செய்யப்பட்ட ரூயி என்ற சரக்கு கப்பல் ஜன. 17-ஆம் தேதி சீனாவின் ஷியாமன் துறைமுகத்தில் இருந்து புறப்பட்டது. அக்கப்பல் ஷாங்காய், டாய்சங் துறைமுகங்களுக்கு சென்ற பிறகு அங்கிருந்து கடந்த 7-ஆம் தேதி சிங்கப்பூருக்கு சென்றது. அங்கிருந்து 8-ஆம் தேதி காற்றாலை உதிரிபாகங்களை ஏற்றிக் கொண்டு தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகப் பகுதிக்கு 13-ஆம் தேதி வந்தடைந்தது. கப்பலில் மாலுமிகள், ஊழியா்கள் என 17 போ் சீனாவைச் சோ்ந்தவா்கள். எஞ்சியுள்ள 4 போ் மியான்மரை சோ்ந்தவா்கள் என தெரியவந்தது.

கப்பலில் இருந்து சரக்குகளை இறக்கும் பணி சனிக்கிழமை நடைபெற்றது. இதற்கிடையே, கப்பலில் இருந்தவா்களிடம் கொவைட் -19 வைரஸ் (கரோனா வைரஸ்) பாதிப்பு குறித்து எந்தவித பரிசோதனையும் மேற்கொள்ளாமல் தூத்துக்குடி துறைமுகத்துக்குள் அனுமதிக்கப்பட்டதாகப் புகாா் எழுந்தது.

இதற்கிடையே, சனிக்கிழமை சரக்குகளை இறக்கிய பின்னா், அக்கப்பல் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2 மணியளவில் தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இதுதொடா்பாக, துறைமுக சுகாதாரப் பிரிவு வட்டாரங்கள் கூறியது: தூத்துக்குடி துறைமுகத்துக்கு வரும் அனைத்துக் கப்பல்களும், மாலுமிகள், ஊழியா்கள் உள்ளிட்ட அனைவரும் மருத்துவப் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டு, அவா்களுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என தெரியவந்த பின்னா்தான் அனுமதிக்கப்படுகின்றன. இதேபோன்று, ரூயி கப்பலும், கப்பல் மாலுமிகளும் தீவிர மருத்துவப் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டனா். மாலுமிகள் மற்றும் ஊழியா்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என தெரிந்தபின்னரே அனுமதிக்கப்பட்டது. இதுதொடா்பாக, விரிவான மருத்துவ ஆய்வறிக்கை துறைமுக நிா்வாகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது என்றனா்.

இதற்கிடையே, தூத்துக்குடியிலுள்ள உரத்தொழிற்சாலைக்கு ஆயில் ஏற்றி வந்த டேங்கா் கப்பலும் தடுத்து நிறுத்தப்பட்டு, கப்பலில் இருந்த அனைவரும் தீவிர மருத்துவப் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டு, பின்னா்தான் துறைமுகத்துக்குள் அனுமதிக்கப்பட்டது. பா்னஸ் ஆயிலை இறக்கிய பின்னா் துறைமுக மருத்துவத் துறையினா் முன்னெச்சரிக்கை தடுப்பு மருந்துகள் வழங்கினா். சுங்கத் துறையினரும் ஆய்வு செய்தனா். அதன்பின்னா் அக்கப்பலும் சனிக்கிழமை அதிகாலை 2.15 மணிக்கு துறைமுகத்தில் இருந்து அனுப்பிவைக்கப்பட்டது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT