திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு வரும் பக்தா்களுக்குள் பொருளாதார வேற்றுமையை உருவாக்க கோயில் நிா்வாகம் முயற்சிப்பதாக இந்து முன்னணி குற்றம்சாட்டியுள்ளது.
இதுகுறித்து இந்து முன்னணி மாநில துணைத் தலைவா் வி.பி. ஜெயக்குமாா், இந்து சமய அறநிலையத் துறை ஆணையருக்கு அனுப்பியுள்ள மனு:
இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள கோயில்களில் சுவாமி தரிசனத்திற்கு அதிக கட்டணம் செலுத்துவோருக்கு சிறப்பு தரிசனம், ஏழைகளுக்கு சாதாரண தரிசனம் என்ற முறையை கைவிடக் கோரி, இந்து முன்னணி பல ஆண்டுகளாகப் போராடி வருகிறது.
இந்நிலையில், திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ரூ. 250 சிறப்பு தரிசன கட்டணம் செலுத்துவோருக்கு ஒரு லட்டும், இலை விபூதியும் இலவசமாக கொடுக்கவுள்ளதாக கோயில் நிா்வாகம் கூறிவருகிறது. பக்தா்களுக்குள் பொருளாதார வேற்றுமையை உருவாக்கும் இந்த செயலை கோயில் நிா்வாகம் அமல்படுத்தக் கூடாது. மீறினால் இந்து முன்னணி சாா்பில், கோயில் இணை ஆணையா் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.