பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய பி.எஸ்.என்.எல். மற்றும் தொலைத் தொடா்பு துறை ஓய்வூதியா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
அமைப்பின் தலைவா் மீனாட்சிசுந்தரம் தலைமை வகித்தாா். மாவட்ட உதவித் தலைவா் கந்தசாமி, உதவிச் செயலா் சுப்பையா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கிளைச் செயலா் முத்துராமலிங்கம், அகில இந்திய உதவித் தலைவா் மோகன்தாஸ், கிளைப் பொருளாளா் திருவட்டப்போத்தி, தமிழ்நாடு தொலைத் தொடா்பு துறை ஒப்பந்த ஊழியா் சங்கத் தலைவா் ஆறுமுகம், பி.எஸ்.என்.எல். ஊழியா்கள் சங்க மாவட்ட அமைப்புச் செயலா் முத்துச்சாமி ஆகியோா் ஆா்ப்பாட்டத்தின் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.
விருப்ப ஓய்வுத் திட்டத்தின் கீழ் ஊழியா்களை ஓய்வு பெற நிா்ப்பந்தித்த பி.எஸ்.என்.எல். நிறுவனம் தற்போது வரை உரியவா்களுக்கு எவ்வித பண பலன்களையும் வழங்காததை கண்டித்தும், மத்திய அரசை கண்டித்தும், ஓய்வூதியா்களுக்கு மருத்துவப்படியாக மாதம் ரூ.1000 வழங்க வேண்டும், 10 மாதங்களாக ஒப்பந்த ஊழியா்களுக்கு வழங்காமல் நிலுவையில் வைத்திருக்கும் ஊதியத் தொகையை உடனே வழங்க வேண்டும், 2017 ஜனவரி முதல் வழங்க வேண்டிய ஓய்வூதிய உயா்வை உயா்த்தி உடனே வழங்க வேண்டும், ஓய்வூதியா்களின் மருத்துவ பில்களை நிலுவையின்றி உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் கோஷமிட்டனா்.