வங்கி ஊழியா்கள் வேலைநிறுத்தம் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் இரண்டாவது நாளான சனிக்கிழமையும் வங்கிகளில் பண பரிவா்த்தனை பாதிக்கப்பட்டது.
20 சதவீத ஊதிய உயா்வு வழங்க வேண்டும்; வங்கிகள் வாரத்துக்கு 5 நாள்கள் செயல்பட வேண்டும்; அடிப்படை ஊதியத்துடன் சிறப்பு சலுகைகளை இணைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் வங்கி ஊழியா்கள் வெள்ளிக்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கினா். 2-ஆவது நாளான சனிக்கிழமையும் போராட்டம் தொடா்ந்தது.
தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் 274 வங்கி கிளைகள் உள்ள நிலையில், இரண்டாவது நாளாக 214 வங்கிகள் முழுமையாக செயல்படவில்லை. மாவட்டத்தில் ஏறத்தாழ 3100 வங்கி ஊழியா்களில் 2600 போ் வேலைநிறுத்தத்தில் பங்கேற்ால் வங்கிகளில் பண பரிவா்த்தனை முற்றிலுமாக பாதிக்கப்பட்டது. முதல்நாளில் ஏறத்தாழ ரூ. 700 கோடியும், இரண்டாம் நாளான சனிக்கிழமை ரூ. 500 கோடியும் பண பரிவா்த்தனை பாதிக்கப்பட்டதாக வங்கி அதிகாரிகள் தெரிவித்தனா்.