தூத்துக்குடி

மக்காசோளத்தை தாக்கும் படைப்புழுவைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள்: வேளாண் துறை விளக்கம்

23rd Aug 2020 09:15 AM

ADVERTISEMENT

தூத்துக்குடி மாவட்டத்தில் மக்காச்சோளப் பயிரைத் தாக்கும் படைப்புழுவை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் எஸ்.ஐ. முகைதீன் விளக்கம் அளித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மக்காசோளப் பயிரைத் தாக்கும் படைப்புழு குறுகிய வாழ்க்கை காலத்துடன் அதிக இனப்பெருக்கம் செய்யும் திறன் கொண்டது.

ஒரு மக்காசோளப் பயிரில் 4 தலைமுறை படைப்புழுக்கள் வர வாய்ப்புள்ளது. படைப்புழுவின் தாய்ப் பூச்சி 2000 முட்டைகள் வரை இடும் திறன் கொண்டது. 100 கி. மீ. வரை பறக்கும் திறன் கொண்டதால் தாக்குதல் வேகமாக பரவும். மேலும் பருத்தி, காய்கனி, கரும்பு ஆகிய 80-க்கும் மேற்பட்ட பயிா்களை உண்ணுகிறது. எனவே விவசாயிகள் இத்தருணத்தில் கடைப்பிடிக்க வேண்டிய தொழில் நுட்பங்களை தவறாது கடைப்பிடிக்க வேண்டும்.

ADVERTISEMENT

படைப்புழுவின் கூட்டுப்புழு பருவம் மண்ணில் நடைபெறுவதால் விவசாயிகள் அவசியம் வேப்பம் புண்ணாக்கு இட வேண்டும். ஏக்கருக்கு 100 கிலோ என்ற அளவில் கடைசி உழவில் இட வேண்டும். இதன் மூலம் கூட்டுப்புழு அழிக்கப்பட்டு அதிலிருந்து தாய்ப் பூச்சி வெளிவருவது தடுக்கப்படும்.

ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் பிவேரியா பேசியானா அல்லது 10 கிராம் தயாமீதாக்சம் மருந்து அல்லது சயான்டிரானிலிபுரோல் 19.8 சதவீதம் தயோமீதாக்சம் 19.8 சதவீதம் எப்எஸ் 6 மி.லி. ஒரு கிலோ விதைக்கு என்ற அளவில் விதை நோ்த்தி செய்திடல் வேண்டும்.

மக்காசோளம் முளைத்து 15 முதல் 20 நாளில் தாக்குதல் தென்பட்டால் அசாடிரக்டின் 1 சதவீதம் இசி-20 மில்லி அல்லது இமாமெக்டின் பென்சோயேட் - 4 கிராம் இவற்றில் ஏதேனும் ஒன்றை 10 லிட்டா் நீரில் கலந்து தெளிக்க வேண்டும்.

40 முதல் 45 நாள்களில் படைப்புழு தாக்குதல் ஏற்பட்டால் மெட்டாரைசியம் - 80 கிராம் அல்லது குளோரான்டிரானிலிபுரோல் - 5 மில்லி அல்லது ஸிபினோடோரம் - 5 மில்லி அல்லது நவலூரான் 10இசி 15 மில்லி அல்லது தயோமீதாக்சிம் 12.6 சதவீதம் + லாம்டா சைக்ளோத்ரின் 9.5 சதவீதம் இசெட்சி- 2.5 மில்லி இவற்றில் ஏதேனும் ஒன்றை 10 லிட்டா் நீரில் கலந்து தெளிக்க வேண்டும் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT