மதுரையை தமிழ்நாட்டின் 2ஆம் தலைநகரமாக அறிவிக்க வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கோவில்பட்டியில் தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பாரதிய ஜனதா கட்சியின் சக்தி கேந்திர பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார்.
பின் செய்தியாளர்களிடம் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன், “தமிழகத்தின் தலைநகரமாக சென்னை உள்ளது. தமிழின் தலைநகரம் என்ற பெருமை மதுரைக்கு மட்டுமே சொந்தம். மதுரை தமிழன்னையின் பூமி. மதுரையை 2ஆம் தலைநகரமாக கொண்டுவரவில்லையென்றால், தமிழின், தமிழரின் பழமையை நாம் ஏற்க மறுப்பதாகும்.” என்றார்.
மேலும், “பழைய மதுரை, இராமநாதபுரம் மாவட்டங்களில் தற்போது வரை எந்தவொரு வளர்ச்சியும் இல்லை. வேலைவாய்ப்பும் இல்லை. தமிழின் பெயரைச் சொல்லி 60 ஆண்டுகள் வரை ஆண்டனர். மதுரைக்கோ, தமிழுக்கோ எந்த பெருமையும் கிடைக்கவில்லை. ஜெயலலிதா முதல்வராக இருக்கும்பொழுது மதுரையில் தமிழன்னையின் சிலையை வைக்க வேண்டும் எனக் கூறினார். ஜெயலலிதாவின் பெயரைச்சொல்லி ஆட்சி நடத்தும் தமிழக அரசு, தமிழின் தலைநகரமாக மதுரையை அறிவிக்க வேண்டும்.” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. அது ஒரு தொடக்கம். அதனை முழுமையாக நிறைவேற்ற வேண்டியது தமிழக அரசின் கடமை.
விநாயகர் சதுர்த்தி விழா என்பது பாஜகவின் விழா இல்லை. அது தமிழக மக்களின் விழா. தேசப்பக்தி மற்றும் நாட்டுப்பற்றை வளர்ப்பதற்காக 1893ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சிக்காரரான பாலகங்காதர திலகர் தான் விநாயகரை வெளியே வைத்து வழிபாட்டை தொடங்கினார். இது இந்துக்களின் பண்டிகை அல்ல. இது ஒரு தேசிய ஒருமைப்பாட்டின் பண்டிகை. எனவே, தமிழக அரசு அதற்கான அனுமதியை வழங்க வேண்டும்.” என்றார்.
“வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுடன் அங்கம் வகிக்கக்கூடிய அரசு தான் அமையும்.” என பொன்.ராதாகிருஷ்ணன் தனது பேட்டியின்போது குறிப்பிட்டார்.
பேட்டியின்போது, தூத்துக்குடி வடக்கு மாவட்ட பாஜக தலைவர் ராமமூர்த்தி, நகரத் தலைவர் பாலசுப்பிரமணியன், மாவட்டப் பொதுசெயலர் பாலாஜி, செய்தித் தொடர்பு மாவட்டத் தலைவர் சீனிவாசன், மாவட்டப் பொதுச்செயலர் பாலாஜி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.