இளையரசனேந்தல் சாலையில் அணுகுசாலை அமைக்காததைக் கண்டித்து இம்மாதம் 15ஆம் தேதி கருப்புக் கொடி ஏந்தி போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவில்பட்டி இளையரசனேந்தல் சாலையில் உள்ள சுரங்கப்பாதையின் இருபுறமும் அணுகுசாலை அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அனைத்து சாதி சமய நல்லிணக்க பண்பாட்டுக் கழகம் மற்றும் 5ஆவது தூண் நிறுவனா் சங்கரலிங்கம் தலைமையில் ஆக.15ஆம் தேதி இளையரசனேந்தல் சாலையில் கருப்புக் கொடி ஏந்தி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து, கோட்டாட்சியா் விஜயா தலைமையில் புதன்கிழமை சமாதானக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், உதவி கோட்டப் பொறியாளா் கூறுகையில், சுரங்கப்பாதையின் இருபுறமும் அணுகுசாலை அமைப்பது குறித்து திட்ட மதிப்பீடு தயாரித்து அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது எனவும், அரசின் அனுமதி கிடைத்தவுடன் பணி நடைபெறும் எனவும் தெரிவித்தாா். கடந்த 6 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்துவரும் நிலையில், தற்போதும் இப்பணியை தொடங்குவதாக தெரியவில்லை. எனவே, திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறும் என போராட்டக் குழுவினா் தெரிவித்தனா்.