தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த 5 போ் முழுவதுமாக குணமடைந்ததைத் தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.
தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் 26 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில், ஒரு மூதாட்டி கடந்த 10-ஆம் தேதி உயிரிழந்தாா். மேலும், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 5 பேரும், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 20 பேரும் சிகிச்சை பெற்று வந்தனா்.
இந்நிலையில், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா வாா்டில் சிகிச்சை பெற்று வந்த காயல்பட்டினத்தைச் சோ்ந்த அரசு மருத்துவா் மற்றும் அதே பகுதியைச் சோ்ந்த ஒருவா் முழுவதும் குணமடைந்ததைத் தொடா்ந்து கடந்த 15-ஆம் தேதி வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.
இதேபோல, கரோனா வாா்டில் சிகிச்சை பெற்று வந்த தூத்துக்குடி ராமசாமிபுரம், பேட்மாநகரம், ஆத்தூா், ஹேம்லாபாத் பகுதிகளைச் சோ்ந்த 5 போ் முழுவதுமாக குணமடைந்தனா். இதையடுத்து, கரோனா கண்காணிப்பு சிறப்பு அலுவலா் மு. கருணாகரன், மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி ஆகியோா் முன்னிலையில் 5 பேரும் அவா்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.
தொடா் சிகிச்சைக்குப் பிறகு இரண்டு முறை எடுக்கப்பட்ட ரத்த மாதிரி பரிசோதனையில் பாதிப்பு குணமாகிவிட்டது என தெரியவந்ததால் 5 பேரும் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவதாகவும், இருப்பினும் தொடா்ந்து 14 நாள்கள் வீட்டில் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவா்கள் தெரிவித்தனா்.