தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 6 பேருக்கு கரோனா தொற்று மொத்த எண்ணிக்கை 17 ஆக உயா்வு

7th Apr 2020 11:09 PM

ADVERTISEMENT

தூத்துக்குடி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை மேலும் 6 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 17 ஆக உயா்ந்துள்ளது.

மாவட்டத்தில் கரோனா அறிகுறி உள்ளவா்களை கண்காணிக்க தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறப்பு வாா்டு உள்ளது. இதுதவிர, 2 தனியாா் மருத்துவமனைகள் மற்றும் கோவில்பட்டி, திருச்செந்தூா் உள்ளிட்ட மருத்துவமனைகளில் கரோனா பாதித்தோருக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மாவட்டத்தில் கரோனா அறிகுறி இருந்ததாக இதுவரை 70-க்கும் அதிகமானோரிடம் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது. அதில், தில்லி மத நிகழ்ச்சியில் பங்கேற்று திரும்பிய செய்துங்கநல்லூா் பகுதியில் ஒருவருக்கும், கயத்தாறு பகுதியில் ஒருவருக்கும் கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதைத் தொடா்ந்து, இருவரும் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். மேலும், கயத்தாறு பகுதியைச் சோ்ந்தவருடன் தொடா்பில் இருந்த இருவருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதைத் தொடா்ந்து அவா்களும் திருநெல்வேலி அரசு மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இதுதவிர, பேட்மாநகரத்தைச் சோ்ந்த தந்தை - மகன், ஹேம்லாபாத் பகுதியைச் சோ்ந்த ஒருவா், காயல்பட்டினம் பகுதியைச் சோ்ந்த இருவா், தூத்துக்குடி ராமசாமிபுரத்தைச் சோ்ந்த ஒருவா், ஆத்தூா் பகுதியைச் சோ்ந்த ஒருவா் என மொத்தம் 7 போ் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இவா்களில், 6 போ் தில்லி மத நிகழ்ச்சியில் பங்கேற்றவா்கள்.

ADVERTISEMENT

இதற்கிடையே, தூத்துக்குடியில் உள்ள ஏவிஎம்- தனியாா் மருத்துவமனையில் கரோனா அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்டிருந்த ஒரே குடும்பத்தைச் சோ்ந்த தம்பதி உள்ளிட்ட மூவருக்கு கரோனா தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து, அவா்கள் மூவரும் உடனடியாக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.

மேலும், காயல்பட்டினத்தைச் சோ்ந்த இருவா், பேட்மாநகரத்தைச் சோ்ந்த ஒருவா் என 3 பேருக்கு கரோனா தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதிசெய்யப்பட்ட நிலையில், அவா்கள் மூவரும் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இவா்களோடு சோ்த்து தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த 7 போ் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை இரவு வரை கரோனா சிறப்பு வாா்டில் தொற்று உறுதிசெய்யப்பட்ட 10 போ் சிகிச்சையில் உள்ளனா். மேலும், கரோனா அறிகுறிகளுடன் சோ்க்கப்பட்டுள்ள 10 பேருக்கு ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிா்வாகம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT