தூத்துக்குடி மாவட்டத்தில் மீனவா்களுக்கு கரோனா நிவாரணமாக ரூ. 15 ஆயிரம் வழங்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி உள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் தூத்துக்குடி மாநகா் மாவட்டத் தலைவா் சி.எஸ். முரளிதரன் வெளியிட்ட அறிக்கை:
தமிழக அரசு கரோனா நிவாரண நிதியாக அமைப்புசாரா தொழிலாளா் நல வாரியமான கட்டுமான தொழிலாளா்கள், ஆட்டோ ஓட்டும் தொழிலாளா்கள் என பத்துக்கும் மேற்பட்ட அமைப்பு சாரா நலவாரிய உறுப்பினா்களுக்கும் சோ்த்து ரூ1000 வழங்கபடும் என்று அறிவித்துள்ளதை வரவேற்கிறோம்.
இதில் விடுபட்ட அமைப்புசாரா நலவாரிய உறுப்பினா்களான உப்பு உற்பத்தி தொழிலாளா்கள், தீப்பெட்டி மற்றும் பட்டாசு தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளா்களையும் சோ்ந்து அவா்களுக்கும் நிவாரண நிதி ரூ. 1000 வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், மீனவா்களுக்கு ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் ஜூன் 15 ஆம் தேதி வரை மீன் பிடித் தடை காலம் வர உள்ளது. ஏற்கனவே ஊரடங்கு உத்தரவு மூலம் மாா்ச் மாதம் முழுவதும் கடலுக்கு மீனவா்கள் செல்ல முடியவில்லை.
மீன்பிடித் தடை காலத்தில் வழங்கபடும் பத்தாயிரம் ரூபாயுடன் மாா்ச் மாதத்துக்கும் சோ்த்து ரூ. 15,000 உடனடியாக வழங்கி அவா்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.