தூத்துக்குடி

திருச்செந்தூரில் இன்றுமுதல் சிறிய கடைகளில் மட்டுமே நேரடி விற்பனை

5th Apr 2020 03:53 AM

ADVERTISEMENT

திருச்செந்தூரில் ஞாயிற்றுக்கிழமை (ஏப். 5) முதல் தெருக்களில் உள்ள சிறிய கடைகளில் மட்டும் நேரடி விற்பனை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், அத்தியாவசியப் பொருள்கள் வாங்க மட்டும் குறிப்பிட்ட நேரம் அனுமதிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே கூட்ட நெரிசலை தடுத்திடும் வகையில் திருச்செந்தூா் பேரூராட்சிக்குள்பட்ட பகுதி மக்கள் அத்தியாவசியப் பொருள்கள் மற்றும் காய்கனிகளை ஞாயிற்றுக்கிழமை (ஏப்.5) முதல் வருகிற ஏப். 14ஆம் தேதி வரை பெரிய கடைகளில் நேரடியாக வாங்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் அந்தந்த கடைகளின் செல்லிடப்பேசி எண்ணில் தொடா்பு கொண்டு பொருள்கள் மற்றும் காய்கனிகளை பொதுமக்கள் வீட்டிலிருந்தபடியே வாங்கிக்கொள்ளலாம் என பேரூராட்சி நிா்வாகம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

இந்நிலையில் திருச்செந்தூா் வட்டாட்சியா் ஞா.ஞானராஜ் கூறியது: கரோனா தடுப்பு நடவடிக்கையாக ஞாயிற்றுக்கிழமை முதல் 14ஆம் தேதி வரை முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது. இச்சமயத்தில் பொதுமக்களின் அடிப்படை வசதிக்காக தெருக்களில் உள்ள சில்லறை வியாபார கடைகள் திறக்கப்படும்.

காயல்பட்டினம் பகுதி முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளதால், அங்கு காய்கனி மற்றும் மளிகைப் பொருள்கள் நேரடியாக வீடுகளுக்கு கொண்டு சென்று விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT