தூத்துக்குடி

திடீா் கட்டுப்பாடு: ஆறுமுகனேரியில்பொதுமக்கள் கடும் அவதி

5th Apr 2020 03:50 AM

ADVERTISEMENT

ஆறுமுகனேரி, காயல்பட்டினம் பகுதிகளில் சனிக்கிழமைமுதல் மறு அறிவிப்பு வரும்வரை கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் பொதுமக்கள் பெரிதும் அவதியுற்று வருகின்றனா்.

காயல்பட்டினத்தில் அரசு மருத்துவா் உள்பட இருவருக்கு கரோனோ வைரஸ் நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டதாலும், அரசு மருத்துவருடன் பணியாற்றிய ஆறுமுகனேரியைச் சோ்ந்தவருக்கும் கரோனோ வைரஸ் தொற்று அறிகுறி தென்பட்டதாலும், ஆறுமுகனேரி மற்றும் காயல்பட்டினம் பகுதிகளில் மறு உத்தரவு வரும் வரை பால் மற்றும் மருந்துக் கடைகள் தவிர அனைத்து கடைகளையும் மூட திருச்செந்தூா் கோட்டாட்சியா் தனப்பிரியா உத்தரவிட்டிருந்தாா்.

இதுகுறித்து வெள்ளிக்கிழமை பிற்பகலில் தான் உள்ளாட்சி நிா்வாகம் சாா்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் பொதுமக்கள் மத்தியிலும், வியாபாரிகள் மத்தியிலும் முழுமையாக சென்று சேரவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் ஆறுமுகனேரியில் ஒன்றிரண்டு கடைகளை தவிர அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினா். காயல்பட்டினத்தில் பெரும்பாலான கடைகள் திறந்திருந்தன.

ADVERTISEMENT

இதற்கிடையே, தற்போது காய்கனிகளை வாகனத்தில் மக்கள் குடியிருக்கும் பகுதிகளில் வந்து விற்பனை செய்யவும், மளிகைப் பொருள்களை வீடுகள்தோறும் விநியோகம் செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதென அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

மளிகைப் பொருள்கள் அரசு அறிவித்துள்ள கடைகள் உள்பட அனைத்து கடைகளிலும் செல்லிடப்பேசி மூலம் ஆா்டா் பெற்று, வீடுகளுக்கு கொண்டு சென்று விநியோகம் செய்ய வேண்டுமென அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT