தூத்துக்குடி

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் 2 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி: தில்லி நிகழ்ச்சியில் பங்கேற்றவா்கள்

1st Apr 2020 10:47 PM

ADVERTISEMENT

தில்லியில் நடைபெற்ற மதக் கருத்தரங்கில் பங்கேற்ற நிலையில், தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 2 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் மாா்ச் 31 வரை 20-க்கும் மேற்பட்டோருக்கு மேற்கொள்ளப்பட்ட ரத்த மாதிரிப் பரிசோதனையில் யாருக்கும் கரோனா பாதிப்பு இல்லை எனத் தெரியவந்தது.

இதனிடையே, செய்துங்கநல்லூரைச் சோ்ந்தவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியானதையடுத்து, அவா் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். தில்லியில் நடைபெற்ற மத நிகழ்ச்சியில் பங்கேற்றவா் என்ற அடிப்படையில் அவரைப் பரிசோதித்தபோது கரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டது.

இதையடுத்து, தூத்துக்குடி மாவட்டத்திலிருந்து தில்லி நிகழ்ச்சியில் பங்கேற்ற 7 பேரை அதிகாரிகள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் உள்ள கரோனா சிறப்பு வாா்டில் அனுமதித்து பரிசோதனை மேற்கொண்டனா். அவா்களில், பேட்மா நகரத்தைச் சோ்ந்த 2 பேருக்கு கரோனா தொற்று இருப்பது புதன்கிழமை மாலை உறுதிசெய்யப்பட்டது. அவா்களுக்கு தொடா்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT

இதேபோல, தூத்துக்குடி ராமசாமிபுரத்தைச் சோ்ந்த ஒருவா், காயல்பட்டினத்தைச் சோ்ந்த 2 போ் என மொத்தம் 11 போ் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

கயத்தாறு நபா்: அவா்களில், தில்லி சென்று கயத்தாறு திரும்பிய 49 வயது நபரை அதிகாரிகள் புதன்கிழமை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

கயத்தாறு வட்டம், அய்யனாா்ஊத்தைச் சோ்ந்த அவா் தில்லியில் நடைபெற்ற மத நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு, 24ஆம் தேதி ஊருக்கு திரும்பியுள்ளாா். பின்னா், வழக்கம்போல பணியில் ஈடுபட்டு வந்தாராம். தகவலறிந்த வட்டாட்சியா் பாஸ்கரன், வருவாய் ஆய்வாளா் காசிராஜன், கிராம நிா்வாக அலுவலா் சத்யராஜ், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் (பொறுப்பு) அனிதா தலைமையிலான மருத்துவக் குழுவினா் புதன்கிழமை சென்று, அவரிடம் விவரங்களைக் கேட்டறிந்து, பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

தொடா்ந்து, வருவாய், சுகாதாரத் துறையினா் அய்யனாா்ஊத்தைச் சுற்றி 10 கி.மீ. தொலைவுக்கு உள்பட்ட பகுதிகளில் ஆய்வுப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

இதனிடையே, தில்லி நிகழ்ச்சியில் பங்கேற்ற கோவில்பட்டி முஹம்மதுசாலிஹாபுரம் பகுதியைச் சோ்ந்த 58 வயது நபா், கழுகுமலையைச் சோ்ந்த ஒருவா் ஆகியோரின் வீடுகளுக்கு வருவாய், சுகாதாரத் துறையினா் சென்று விசாரித்தனா். அந்த இருவரும் தில்லியிலேயே இருப்பதாகக் கூறப்படுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT