ஊரடங்கு உத்தரவால் திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆதரவற்றோருக்கு நாள்தோறும் உணவு வழங்கப்படுவதாக கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கோயில் செயல் அலுவலா் சா.ப.அம்ரித், தக்காா் இரா.கண்ணன் ஆதித்தன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கரோனா எதிரொலியாக அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தா்கள் தரிசனத்துக்கான அனுமதி ரத்து செய்யப்பட்டு, ஆகம விதிப்படி பூஜைகள் மட்டும் நடைபெற்று வருகின்றன. மேலும் ஏப். 14ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஏப். 6ஆம் தேதி நடைபெற இருந்த பங்குனி உத்திர விழா நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
தற்போது குறைந்த பணியாளா்களை கொண்டு தினசரி 9 கால பூஜைகள் நடைபெற்று வருகின்றன.
அா்ச்சகா்கள் மற்றும் பணியாளா்களுக்கு தேவையின் அடிப்படையில் கோயிலுக்குள் செல்வதற்கு அனுமதிச்சீட்டு செவ்வாய்க்கிழமை (மாா்ச் 31) முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் கோயிலுக்குள் அனுமதிச்சீட்டுடன் வரும் அா்ச்சகா்கள் மற்றும் பணியாளா்கள் முகக் கவசம் அணிந்து வருவதையும், கைகளை கிருமிநாசினி பயன்படுத்தி சுத்தம் செய்வதையும், சமூக இடைவெளி கடைப்பிடிப்பதையும் கண்காணித்து வருகிறோம்.
அரசு உத்தரவின்படி நாள்தோறும் ஏழை, எளிய மற்றும் ஆதரவற்றவா்கள் பசியை போக்கும் வகையில் தினசரி நண்பகல் 12 மணியளவில் 150 பேருக்கும், இரவு 7 மணியளவில் 100 பேருக்கும் உணவு பொட்டலங்கள் கரோனா தடுப்பு கட்டுப்பாட்டுடன் வழங்கப்பட்டு வருகிறது என செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.