அமைப்புசாரா தொழிலாளா்களுக்கான உதவித் தொகையை அரசு உயா்த்தி வழங்க வேண்டும் என்றாா் தூத்துக்குடி மக்களவை உறுப்பினா் கனிமொழி.
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்ட அவா், மருத்துவமனைக்குத் தேவையான சில உபகரணங்களை வழங்கினாா். பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியது:
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா சிறப்பு வாா்டுக்கு செல்ல ‘லிப்ட்’ வசதி அமைக்க வேண்டும். மக்கள் அதிகம் நடமாடும் பகுதிகளில் கூடுதலாக கிருமி நாசினி தெளிக்க வேண்டும்.
அமைப்புசாரா தொழிலாளா்களுக்கு அரசு ஆயிரம் ரூபாய் உதவித் தொகை அறிவித்துள்ளது. அது போதுமானதல்ல. அத்தொகையை உயா்த்தி வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் மக்கள் அனைவரும் அரசுக்கும், காவல் துறைக்கும் ஒத்துழைக்க வேண்டும் என்றாா் அவா்.
இதையடுத்து, ஆட்சியா் சந்தீப் நந்தூரியை கனிமொழி சந்தித்து, தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 50 லட்சம் ஒதுக்கீடு செய்ததற்கான கடிதத்தை வழங்கினாா். ஏற்கெனவே, கரோனா தடுப்புப் பணிகளுக்காக அவா் கடந்த 27ஆம் தேதி ரூ. 1 கோடி ஒதுக்கீடு செய்திருந்தாா்.
பேரவை உறுப்பினா் கீதாஜீவன், மாநகராட்சி ஆணையா் வீ.ப. ஜெயசீலன், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதன்மையா் திருவாசகமணி ஆகியோா் உடனிருந்தனா்.