தூத்துக்குடியில் ரியல் எஸ்டேட் அதிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான 5 பேர் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.
தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையம் அருகே கடந்த மாதம் 21ஆம் தேதி பாளையங்கோட்டை கே.டி.சி. நகரைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் சிவக்குமார் அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக வழக்குப் பதிந்த தென்பாகம் போலீஸார் 14 பேரை கைது செய்தனர். 5 பேர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
இந்நிலையில், இந்த கொலை வழக்கில் கைதான கோரம்பள்ளம் தெற்கு தெருவைச் சேர்ந்த ராஜேஷ்வரன் (29), கோரம்பள்ளம் பிஎஸ்பி நகர் 2ஆவது தெருவைச் சேர்ந்த அந்தோணி பீட்டர் (24), பேரூரணி பிரதான சாலை பகுதியைச் சேர்ந்த மருதவேல் (27), தூத்துக்குடி அண்ணாநகர் 2ஆவது தெருவைச் சேர்ந்த விக்னேஷ்வரன் (30), குலையன்கரிசல் கிழக்கு தெருவைச் சேர்ந்த சத்தியராஜ் (25) ஆகிய 5 பேரையும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.