ஏரலில் கூட்டுறவுத் துறை மற்றும் வருவாய்த் துறை சார்பில் நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா, ரூ.17.5 லட்சம் மதிப்பில் நவீனமயமாக்கப்பட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அலுவலக கட்டடத் திறப்பு விழா ஆகிய இரு பெரும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜு தலைமை வகித்து, மொத்தம் 547 பயனாளிகளுக்கு ரூ.2.48 கோடி மதிப்பில் நலத் திட்ட உதவிகளை வழங்கினார்.
எஸ்.பி.சண்முகநாதன் எம்எல்ஏ, சின்னப்பன் எம்எல்ஏ ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து, கூட்டுறவு கடன் சங்க புதிய அலுவலக கட்டடத்தை அமைச்சர் திறந்து வைத்தார்.
பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியது: கீழடியில் அகழ்வாராய்ச்சி நடைபெற்று வருவதைப் போல், வருகிற ஜனவரி மாதத்தில் சிவகளையில் அகழ்வாராய்ச்சி தொடங்கப்பட உள்ளது. ஆதிச்சநல்லூரிலும் அகழ்வாராய்ச்சி தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்றார் அவர்.
விழாவில், திருச்செந்தூர் கோட்டாட்சியர் (பொ) விஜயகுமார், தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் சுதாகர், துணைத் தலைவர் கணேஷ்பாண்டியன், முன்னாள் எம்எல்ஏ மோகன், தூத்துக்குடி மண்டல இணைப் பதிவாளர் (பொ) இந்துமதி, மத்திய கூட்டுறவு வங்கி பொது மேலாளர் கனகராஜ், கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குநர்அந்தோணி பட்டுராஜ், ஏரல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் தசரத பாண்டியன், வட்டாட்சியர் அற்புதமணி மற்றும் அரசியல் கட்சியினர் கலந்துகொண்டனர்.