தூத்துக்குடி மாவட்ட விவசாயப் பணிகளுக்காக பாபநாசம், மணிமுத்தாறு அணைகளில் இருந்து அக்டோபர் 4 ஆம் தேதி வரை தண்ணீர் திறக்கப்படும் என்றார் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி.
தூத்துக்குடியில் திங்கள்கிழமை அவர் அளித்த பேட்டி:
போஷன் அபியான் திட்டத்தின் கீழ், "போஷன் மா" நிகழ்ச்சி செப்டம்பர் மாதம் முழுவதும் தூத்துக்குடி மாவட்டத்தின் 13 வட்டாரங்களில் உள்ள 1505 அங்கன்வாடி மையங்களில் கொண்டாடப்படுகிறது. இதன் முக்கிய நோக்கம் குழந்தைகள், கர்ப்பிணிகள் சிறந்த ஊட்டச்சத்து உணவுகளை உண்ண வேண்டும் என்பதே.
ரத்தசோகை, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட நோய் தாக்கத்தில் இருந்து முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும். இதுகுறித்து தாய்மார்களுக்கும், பொதுமக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மாவட்டம் முழுவதும் மகளிர் திட்டம், கல்வித் துறை, ஊரக வளர்ச்சித் துறை, சுகாதாரத் துறை, வேளாண்மை துறைகள் மூலமாக பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை எடுக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. பாபநாசம், மணிமுத்தாறு அணையில் இருந்து தூத்துக்குடி மாவட்ட பாசனத்துக்காக ஏற்கெனவே 1500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பதற்கான கால அவகாசத்தை அக்டோபர் 4 ஆம் தேதி வரை நீட்டித்தும், விநாடிக்கு 2,500 கன அடி தண்ணீர் திறப்பதற்கும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, 1500 கன அடி தண்ணீர் தூத்துக்குடி மாவட்டத்துக்கும், 1000 கன அடி தண்ணீர் திருநெல்வேலி மாவட்டத்துக்கும் பயன்படுத்தப்படும். தூத்துக்குடி மாவட்டத்தில் பொது இடங்களில் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறாக விளம்பர பதாகைகள், கட்அவுட்டுகள் வைக்கப்பட்டால் அவை பறிமுதல் செய்யப்படும்.
மேலும், விளம்பர பதாகைகள் அச்சடித்த நிறுவனம் மற்றும் பதாகை வைத்த நபர் உள்ளிட்டோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பொது நிகழ்ச்சிகள், அரசியல் நிகழ்ச்சிகள் போன்றவற்றுக்கு விளம்பர பதாகைகள், கட் அவுட் வைக்க காவல் துறையிடம் தடையில்லா சான்றிதழ் பெற்று மாவட்ட ஆட்சியரிடம் முறையாக அனுமதி பெறவேண்டும். அதன்பிறகே, பதாகை வைப்பதற்கு அனுமதிக்கப்படும்.
ஸ்டெர்லைட் ஆலை அரசாணையின்படி முழுவதுமாக மூடப்பட்டுள்ளது. ஆலைக்குள் இருக்கும் ஜிப்சம், பாஸ்பேட்டுகள் உள்ளிட்டவை முழுமையாக அரசு உத்தரவின்படி அகற்றப்பட்டுவிட்டன. இந்நிலையில், ஆலையை பராமரிப்பது தொடர்பான முடிவுகளை அரசு மட்டுமே எடுக்க முடியும். ஆனால், துணை ஆட்சியர் தலைமையின் கீழ் உள்ள குழுவினர் ஆலையில் மாதம் ஒருமுறை ஆய்வு நடத்தி அங்குள்ள பசுமை பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் ரசாயனங்கள் உள்ளதா? என ஆய்வு செய்து அதை கண்காணித்து வருகின்றனர் என்றார் அவர்.
தொடர்ந்து, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மூலம் 10 பயனாளிகளுக்கு ரூ. 35,730 மதிப்பிலான விலையில்லா தையல் இயந்திரங்களையும், மாற்றுத்திறனாளிகள் இருவருக்கு ரூ. 8,340 மதிப்பிலான மடக்கு சக்கர நாற்காலிகளையும் ஆட்சியர் வழங்கினார்.
நிகழ்ச்சியில், தூத்துக்குடி சார் ஆட்சியர் சிம்ரான் ஜீத் சிங் கலோன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தனபதி, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் சங்கரநாராயணன், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் கவிதா, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சிவசங்கரன் மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.