ஆறுமுகனேரியில் முன்பகை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரை வெட்டியதாக 5 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிந்தனர்.
ஆறுமுகனேரி காமராஜபுரத்தைச் சேர்ந்த கோபால் மகன் கோவிந்தசாமி(28). கேரளத்தில் சிப்ஸ் கடை நடத்திவருகிறார். இவர் ஆறுமுகனேரியில் கடந்த ஆண்டு புதிய வீடுகட்டினாராம். தற்போது சீசன் இல்லாத காரணத்தினால் ஆறுமுகனேரியில் உள்ள வீட்டிற்கு கோவிந்தசாமி வந்தாராம். இவரது உறவினர் முத்துராஜ்(20) ஞாயிற்றுக்கிழமை (செப். 15) மாலையில் அங்கு வந்து கிரகபிரவேசத்திற்கு ஏன் அழைப்பிதழ் கொடுக்கவில்லை எனக் கூறி தகராறு செய்தாராம்.
இதனைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணிக்கு 5 பேர் கொண்ட கும்பல் கையில் அரிவாள் மற்றும் கம்புடன் கோவிந்தசாமி வீட்டிற்கு வந்து அவரை அரிவாளால் வெட்டினராம். இதனை தடுக்கச் சென்ற அவரது அண்ணன் வெங்கடசாமி(30), அக்கா விஜயா(40), மற்றும் விஜயாவின் மருமகன் செல்லத்துரை(28)ஆகியோருக்கு தலை மற்றும் கைகளில் அரிவாள் வெட்டு விழுந்ததாம். இதில் பலத்த காயமடைந்த 4 பேரும் திருச்செந்தூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இது குறித்து புகாரின் பேரில், இச்சம்பவத்தில் ஈடுபட்டதாக பாரதிநகரைச் சேர்ந்த பெருமாள் மகன் பாஸ்கர், அவரது சகோதரர்கள் செல்லக்குட்டி, சின்னத்தம்பி, அதேபகுதியைச் சேர்ந்த முத்துராஜ் மற்றும் குமார், ஆகியோரை ஆறுமுகனேரி போலீஸார் தேடி வருகின்றனர்.