தூத்துக்குடி

கோவில்பட்டி, கயத்தாறில் ஜாக்டோ - ஜியோ ஆர்ப்பாட்டம்

7th Sep 2019 07:35 AM

ADVERTISEMENT

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் கோவில்பட்டி,  கயத்தாறில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில், "தேசிய புதிய கல்விக் கொள்கை- 2019 வரைவை ரத்து செய்ய வேண்டும்; தொடக்க கல்வியை அழிக்கின்ற அரசாணை 145-ஐ  திரும்பப் பெற வேண்டும்; தொடக்க, நடுநிலைப்பள்ளிகளை 20 கி.மீ. தொலைவுக்குள் உள்ள மேல்நிலைப்பள்ளிகளோடு இணைப்பதை கைவிட வேண்டும்; ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், பணியாளர்கள் மீது எடுக்கப்பட்டுள்ள 17 பி ஒழுங்கு நடவடிக்கைகள், பணி மாறுதல் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்; காவல்துறையால் போடப்பட்டுள்ள குற்ற வழக்குகளை ரத்து செய்ய வேண்டும்; ஜாக்டோ- ஜியோ அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியனை ஓய்வு பெறும் நாளில் தற்காலிக பணி நீக்கம் செய்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து ப ழை முறையை அமல்படுத்த வேண்டும்; ஜாக்டோ- ஜியோ அமைப்பின் கோரிக்கைகளை நிறைவேற்றிட அதன் நிர்வாகிகளை அழைத்துப் பேசி அரசுக்கும், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், பணியாளர்களுக்குமான உறவை பேண வேண்டும்' என்பன உள்ளிட்ட  கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. 
கோவில்பட்டி வட்டாட்சியர் அலுவலகம் முன்  நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, தமிழக ஆசிரியர் கூட்டணியின் மாவட்டத் தலைவர் ராமமூர்த்தி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க வட்டத் தலைவர் சுப்பிரமணியன் ஆகியோர் தலைமை வகித்தனர். தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலர் செல்வராஜ் விளக்கிப் பேசினார். 
கயத்தாறு ஒன்றிய அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, தமிழக ஆசிரியர் கூட்டணி கயத்தாறு வட்டாரச் செயலர் சுடலைமுத்து, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஹரிபாலகிருஷ்ணன் ஆகியோர் தலைமை வகித்தனர்.  
  ஓட்டப்பிடாரம் வட்டாட்சியர் அலுவலகம் முன் அரசு ஊழியர் சங்க வட்டத்தலைவர் பி.ஆதிராமலிங்கம், ஜாக்டோ- ஜியோ அமைப்பின் வட்டச் செயலர் எஸ்.கோபால்சாமி ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது.  இதில், அரசு ஊழியர் சங்க வட்டச்செயலர் ஜி.திருமலை, மாவட்டப் பொருளாளர் மு.தமிழரசன், ஜாக்டோ- ஜியோ மாவட்டத் தலைவர் ஆர்.பவுல் ஆபிரகாம், மாவட்ட துணைச் செயலர் கே.குணசேகரன்உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT