தூத்துக்குடி

அரசின் விதிமுறைகளை மீறும் விசைப்படகுகள் மீது நடவடிக்கை: குறைதீர் கூட்டத்தில் மீனவர்கள் வலியுறுத்தல்

7th Sep 2019 07:40 AM

ADVERTISEMENT

தூத்துக்குடி மாவட்டத்தில் அரசின் விதிமுறைகளை மீறி இயக்கப்படும் விசைப்படகுகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என  குறைதீர் கூட்டத்தில் மீனவர்கள் வலியுறுத்தினர்.
 தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரகத்தில் மீனவர்கள் குறைதீர் கூட்டம்  ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டம் தொடங்கியதும்,  மாதம்தோறும் தவறாமல் குறைதீர் கூட்டத்தை நடத்த வேண்டும் என மீனவர்கள் சிலர் வலியுறுத்தினர்.
 இதற்கு பதிலளித்த  ஆட்சியர்,   பல்வேறு காரணங்களால் மீனவர் குறைதீர் கூட்டத்தை ஓராண்டுக்கு மேலாக நடத்த முடியவில்லை. இனிமேல் தொடர்ந்து 2 அல்லது 3 மாதங்களுக்கு ஒருமுறை மீனவர் குறைதீர் கூட்டம் நடத்தப்படும் என்றார்.
முன்னாள் கவுன்சிலர் அகஸ்டின் பேசுகையில், "தூத்துக்குடி மாநகராட்சியில் மீனவர்கள் அதிகமுள்ள கிழக்கு மண்டலத்தில் உள்ள 18 வார்டுகளில் 16 வார்டுகள் பெண்கள் வார்டுகளாக மாற்றப்பட்டுள்ளன. 2 வார்டுகள் மட்டுமே ஆண்கள் வார்டுகளாக உள்ளன. இவற்றை மறுசீரமைப்பு செய்ய வேண்டும்' என்றார்.
இதே கோரிக்கையை,  மதிமுக மீனவரணி மாநிலச் செயலர் நக்கீரன், மீனவர் தர்மம் ஆகியோரும் வலியுறுத்தினர். 
அதற்கு,  மாநகராட்சி ஆணையரிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் பதிலளித்தார்.
இதைத் தொடர்ந்து,  நாட்டுப்படகு மீனவர் சங்கத் தலைவர் கயஸ் பேசியது: மாவட்டத்தில் அரசின் விதிமுறைகளுக்குள்பட்டு படகு இயந்திரத்தின் குதிரைத்திறனை மாற்றி அமைக்க உரிய அவகாசம் கொடுக்கப்பட்ட போதிலும், இன்னும் சில விசைப்படகுகளில் விதிகளை மீறி 450 முதல் 550 குதிரை திறன் கொண்ட இயந்திரத்தை பயன்படுத்துகின்றனர். இதுகுறித்து மீன்வளத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.  மேலும், நாட்டுப்படகு மீனவர்களின் வலைகளை சேதப்படுத்தும் விசைப்படகு மீனவர்கள் உரிய இழப்பீடுகளை வழங்க மறுக்கின்றனர். இது தொடர்பாக அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
மேலும், ஆலந்தலை, மணப்பாடு பகுதியில் உள்ள கடலோர பாதுகாப்பு காவல் நிலையங்களை முழுமையாக செயல்படுத்த வேண்டும். மணப்பாட்டில் தூண்டில் பாலம் அமைப்பதற்கு பதிலாக சிறிய துறைமுகம் அமைத்தால் பயனுள்ளதாக இருக்கும். புன்னக்காயல் தூண்டில் வளைவின் இரு பக்கமும் மணல் மேடு உருவாகி மீனவர்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. அந்த மணல் மேடுகளை அகற்றி ஆழப்படுத்த வேண்டும். வீரபாண்டியன்பட்டினம் மற்றும் இனிகோநகர் பகுதியில் கடல் அரிப்பை தடுக்க வேண்டும் என மீனவர்கள் பலர் வலியுறுத்தினர்.
ரூ.30 கோடியில் தடுப்புச் சுவர்:  பின்னர், ஆட்சியர் சந்தீப் நந்தூரி பேசியது:  தூத்துக்குடி மாவட்டத்தில் 2018-19 ஆம் ஆண்டு தேசிய மீனவர் சேமிப்பு நிவாரணத் திட்டத்தின் கீழ் 21,646 மீனவ பயனாளிகளின் பங்களிப்பு தொகையாக ரூ.3.23 கோடி செலுத்தப்பட்டு மத்திய - மாநில அரசுகளின் 50 சதவீத பங்களிப்பு தொகையாக ரூ.6.47 கோடியை மீனவர்கள் பெற்றுள்ளனர்.
மீன்பிடி தடைக்கால நிவாரண திட்டத்தின் கீழ், 2019ஆம் ஆண்டில் 19,239 மீனவக் குடும்பங்களுக்கு தலா ரூ.5,000 வீதம் மொத்தம் ரூ.9.62 கோடி வழங்கப்பட்டுள்ளது. மீன்பிடி குறைவு காலம் நிவாரணம் வழங்கும் திட்டத்தின்கீழ் 2018-19 ஆம் ஆண்டுக்கு 18,533 மீனவ குடும்பங்களுக்கு தலா ரூ.5,000 வீதம் மொத்தம் ரூ.9.27 கோடி வழங்கப்பட்டுள்ளது.
 தூத்துக்குடி மாவட்டம் பெரியதாழை மீனவ கிராமத்தில் ஏற்படும் கடல் அரிப்பை தடுப்பதற்காக ரூ.30  கோடி மதிப்பில் தடுப்பு சுவர் அமைக்கும் பணி விரைவில் தொடங்கும். பெரியதாழை, ஆலந்தலை ஆகிய மீனவ கிராமங்களில் ஏற்படும் கடல் அரிப்பை தடுப்பதற்காக தடுப்புசுவர் அமைக்க திட்ட அறிக்கை தயார் செய்து அனுப்பி வைக்கப்பட உள்ளது. மணப்பாடு மீனவ கிராமத்தில் சமூக பொறுப்பு நிதி ரூ.1.17 கோடி மதிப்பில் தற்காலிக நீர்வழி பாதை அமைக்கப்பட்டுள்ளது. மேலும், பெரியதாழை மீனவ கிராமத்தில் ரூ.1.15 கோடி மதிப்பில் தற்காலிக தடுப்பு சுவர் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது என்றார் அவர்.
கூட்டத்தில், தூத்துக்குடி சார் ஆட்சியர் சிம்ரான் ஜீத் சிங் கலோன்,  மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தனபதி, திருச்செந்தூர் கோட்டாட்சியர் தனப்ரியா, மீன்வளத் துறை இணை இயக்குநர் சந்திரா, உதவி இயக்குநர் பாலசரஸ்வதி, மீன்வளத் துறை செயற்பொறியாளர் முத்துக்குமார் மற்றும் மீனவர்கள், மீனவர் சங்கப் பிரதிநிதிகள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT