தூத்துக்குடி

தூத்துக்குடியில் ரூ. 15 லட்சத்தில் இருசக்கர வாகன காப்பகம் புதுப்பிப்பு

4th Sep 2019 09:41 AM

ADVERTISEMENT

தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் மாநகராட்சி மூலம் ரூ.15 லட்சம் மதிப்பில் புதுப்பிக்கப்பட்ட நவீன இருசக்கர வாகன காப்பகத்தை செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் செ. ராஜு செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தார். 
தூத்துக்குடி மாநகராட்சியில் பழைய மற்றும் புதிய பேருந்து நிலையங்களில் பொதுமக்கள் வந்து செல்லவும், வெளியூர் பயணம் செல்லும் மக்களின் வசதிக்காக இருசக்கர வாகன காப்பகம் செயல்பட்டு வருகிறது. 
புதிய பேருந்து நிலையத்தில் உள்ள பேருந்து நிலைய இருசக்கர வாகன காப்பகம் இதுவரை ஆண்டு குத்தகை அடிப்படையில் தனியார் மூலம் பராமரிக்கப்பட்டு வந்தது.
தற்போது, இந்தக் காப்பகம் மாநகராட்சி மூலம்  ரூ.15 லட்சம் மதிப்பில் நவீன முறையில் முற்றிலும் கணினி மயமாக்கப்பட்டு புதுப்பிக்கப்பட்டது. இதன் திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமை வகித்தார். மாநகராட்சி ஆணையர் வீ.ப. ஜெயசீலன், சட்டப் பேரவை உறுப்பினர்கள் எஸ்.பி. சண்முகநாதன், சின்னப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அமைச்சர் கடம்பூர் செ. ராஜு , காப்பகத்தை திறந்து வைத்து, அந்தப்  பகுதியில் மரக்கன்றுகளை நட்டார். 
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: 
புதிய பேருந்து நிலையத்தில் உள்ள நவீன இருசக்கர வாகன காப்பகம் மாநகராட்சி மூலம் நேரடியாக இயக்கப்படுகிறது. மேலும் இந்த வாகன காப்பகத்தில் இருசக்கர வாகனங்களின் வருகை நேரம் மற்றும் வாகன பதிவு எண் கணினியில் பதிவு செய்யப்பட்டு  வாகன உரிமையாளர்களுக்கு பதிவு அடங்கிய ஸ்மார்ட் கார்டு வழங்கப்படுகிறது. 
வாகன உரிமையாளர்கள் வாகனங்களை திரும்ப எடுத்து செல்லும் போது அவர்களுக்கு வழங்கப்பட்ட  அட்டையை ஸ்கேன் செய்து அதற்கேற்ப கட்டணம் வசூல் செய்யப்படும். தினசரி கட்டணம் 12 மணி நேரத்துக்கு இருசக்கர வாகனத்துக்கு ரூ. 5, மிதிவண்டிக்கு ரூ. 3 வசூல் செய்யப்படும். மேலும்,  மாத கட்டணமாக இருசக்கர வாகனத்துக்கு ரூ.300, மிதிவண்டிக்கு ரூ.180 வசூல் செய்யப்படும் என்றார் அவர்.
 தொடர்ந்து,  மாநகராட்சி பகுதியில் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் தேவையான குடிநீர் கிடைப்பதற்காகவும், தாகத்தை தீர்ப்பதற்காகவும் மாநகராட்சி மூலம் குரூஸ்பர்னாந்து சிலை மற்றும் ராஜாஜி பூங்கா அருகில் 2 இடங்களில் தலா ரூ.1.5 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களை அமைச்சர்  திறந்து வைத்தார்.
 நிகழ்ச்சியில், மாநகராட்சி நிர்வாக பொறியாளர் ரூபன் சுரேஷ் பொன்னையா, உதவி ஆணையர் ஆறுமுகம், உதவி செயற்பொறியாளர் சரவணன், உதவி பொறியாளர் பிரின்ஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT