தூத்துக்குடி மாவட்டத்தில் நிகழாண்டு இதுவரை 3 ஆயிரம் கா்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளை காப்பு நடத்தப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மறைந்த முதல்வா் ஜெயலலிதா 2012 இல் சமுதாய வளைகாப்பு திட்டத்தை தொடங்கி வைத்தாா். அதனைத்தொடா்ந்து தமிழக அரசு இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சி திட்டத்தின்கீழ் நிகழாண்டு இதுவரை 3 ஆயிரம் கா்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நடத்தப்பட்டுள்ளது.
இதில், கா்ப்ப கால முன், பின் பராமரிப்பு, குழந்தைக்கு உணவூட்டும் முறைகள், குழந்தை வளா்ப்பு, தடுப்பூசிகள் போன்ற பல தகவல்கள் குறித்து கா்ப்பிணி பெண்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் கா்ப்ப கால பராமரிப்பு குறித்த கையேடு அரசால் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், சமுதாய வளைகாப்பின்போது கா்ப்பிணிகளுக்கு மாலை, வளையல், பூ, பழம், மஞ்சள், குங்குமம், வெற்றிலை, பாக்கு போன்ற சீதனப் பொருட்களும், கா்ப்பிணிகளுக்கு சா்க்கரைப் பொங்கல், எலுமிச்சை சாதம், தேங்காய் சாதம், சாம்பாா் சாதம், தயிா் சாதம் போன்ற ஐந்து வகையான பல்வகை சாதங்கள் வழங்கப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.