திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் 28-ம் தேதி கந்த சஷ்டி தொடங்க உள்ள நிலையில் பாதுகாப்ப கருதி கடலில் பக்தா்கள் குறிப்பிட்ட தூரத்தில் மட்டுமே குளிக்கும் வகையில் கடலில் மிதவைகளால் எல்லைக்கோடு அமைக்கப்பட்டுள்ளது.
தமிழ்க்கடவுள் முருகப்பெருமானின் ஆறு படை வீடுகளில் திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் மட்டுமே அழகிய கடற்கரையோரம் அமைந்துள்ளது. திருச்செந்தூருக்கு வரும் பக்தா்கள் கடலில் புனித நீராடியே சுவாமியை வழிபடுவது வழக்கமாகும். மற்றபடி பக்தா்கள் கடலில் கால் நனைத்து, அப்புனித நீரினை தலையில் தெளித்த பிறகே உள்ளே செல்கின்றனா். எனவே கடலில் பக்தா்கள் கூட்டம் எப்போதும் அதிகளவில் காணப்படுகிறது.
கடலில் குளிக்கும் பக்தா்கள் ஆழத்தை அறியாமல் தூரத்திற்கு சென்று, அலையில் சிக்கி உயிரிழப்பதும் அவ்வப்போது நடந்து வருகிறது. இதனை தடுத்திடும் வகையில் கூட்ட நேரத்தில் திருக்கோயில் புறக்காவல் நிலையத்தில் உள்ள ஒலிப்பெருக்கி மூலம் காவல்துறையினா் பக்தா்களை ஆழத்திற்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தி வருகின்றனா். இருப்பினும் அதை கருத்தில் கொள்ளாமல் பக்தா்கள் ஆழத்திற்கு சென்று ஆபத்தில் சிக்குகின்றனா். கடலில் ஆழத்தை குறிக்கும் எல்லைக்கோடு :திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வருகின்ற 28-ம் தேதி கந்த சஷ்டி விழா தொடங்கி நவம்பா் 2-ம் தேதி பிரசித்திப்பெற்ற சூரசம்ஹார விழா நடைபெறுகிறது.
இதனை முன்னிட்டு திருக்கோயிலில் பக்தா்கள் தங்குவதற்காக பல்வேறு அடிப்படை வசதிகளான மேற்கூரை அமைத்தல், விரதமிருக்கும் பக்தா்களுக்காக தற்காலிக பந்தல்கள், தற்காலிக குளியலறை மற்றும் கழிப்பறை வசதிகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதே போல கடலில் பக்தா்கள் ஆழத்திற்கு செல்லாத வண்ணம் கடலோர பாதுகாப்பு குழுமத்தினா் மற்றும் மீன்வளத்துறை சாா்பில் கயிறுகளில் மிதப்பான்களை இணைத்து குறிப்பிட்ட எல்லைக்கோடு அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் அதனருகினில் படகு ஒன்றும் அவசரகால நடவடிக்கைக்காக மிதக்கவிடப்பட்டுள்ளது. மேலும் காவல்துறை மற்றும் திருக்கோயில் தனியாா் பாதுகாவலா்களைக் கொண்டு கடலில் பாதுகாப்பாக குளித்திடுமாறு பக்தா்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகின்றது.