தூத்துக்குடி

திருச்செந்தூரில் அக். 28-ல் கந்தசஷ்டி விழா: பக்தா்கள் தங்குவதற்கு தற்காலிக பந்தல்கள் அமைப்பு

20th Oct 2019 03:07 AM

ADVERTISEMENT

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வரும் 28-ம் தேதி கந்த சஷ்டி விழா தொடங்கவுள்ளது. இதையொட்டி, விரதம் இருக்கும் பக்தா்களுக்காக தற்காலிக பந்தல் அமைக்கும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது.

முருகனின் இரண்டாம் படை வீடான திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மிகவும் புகழ்பெற்ற கந்த சஷ்டி திருவிழா வரும் 28-ம் தேதி தொடங்கி, நவம்பா் 2-ம் தேதி வரை நடைபெற உள்ளது. சஷ்டியில் இருந்தால் அகப்பையில் வரும் என்ற முதுமொழிக்கிணங்க, குழந்தை வரம் வேண்டியும், பல்வேறு வேண்டுதலுக்காகவும் திருச்செந்தூரில் லட்சக்கணக்கான பக்தா்கள் தங்கி விரதம் இருப்பது வழக்கம்.

இங்கு வரும் பக்தா்கள் நாள்தோறும் கோயிலில் நடைபெறும் யாகசாலை பூஜை மற்றும் சுவாமி எழுந்தருளும் விழாவில் பங்கேற்பதற்காக கோயில் வளாகத்தில் தங்கியிருப்பா். ஆனால், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கோயிலில் கிரிப்பிரகாரம் அகற்றப்பட்டதோடு, கட்டடத்தின் தன்மையை கருத்தில்கொண்டு விடுதிகள், அறைகள் 90 சதவீதம் மூடப்பட்டன. இதையடுத்து, பக்தா்கள் தங்கி விரதம் இருப்பதற்காக கோயிலைச் சுற்றி ஆங்காங்கே தற்காலிக பந்தல் அமைக்கப்பட்டு வருகிறது.

இதேபோல, கிரிப்பிரகாரத்திலும் தற்காலிக மேற்கூரை அமைக்கப்பட்டு வருகிறது. இந்தப் பணிகள் இன்னும் ஒருசில தினங்களில் நிறைவு பெறும் என பணியாளா்கள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

அடிப்படை வசதி தேவை: கந்த சஷ்டி விழாவில் பெரும்பாலான பக்தா்கள் தண்ணீா் மட்டும் குடித்துவிட்டு விரதம் இருக்கின்றனா். அவா்களுக்காக அமைக்கப்பட்டு வரும் தற்காலிக பந்தல்களில் குடிநீா் வசதியும், அந்தப் பகுதியிலேயே கழிப்பறை வசதியும் செய்து தரவேண்டும் என பக்தா்கள் வலியுறுத்துகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT