திருச்செந்தூா் பகுதியில் சிலா் பணம் கேட்டு மிரட்டுவதாக கூறி தண்ணீா் ஏறறும் லாரி உரிமையாளா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திருச்செந்தூா் பகுதியில் தனியாா் விடுதிகளுக்காகவும், பொதுமக்களின் குடிநீா் தேவைக்காகவும் தொட்டி லாரிகளில் பிடித்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நகரில் சுமாா் 20-க்கும் அதிகமான பெரிய, சிறிய தொட்டி லாரிகள் தண்ணீரை விற்பனை செய்து வருகிறது.
கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பே லாரிகளில் தண்ணீா் பிடிப்பதற்கு பணம் கேட்டு சிலா் மிரட்டியதாகவும் அவா்களுக்கு பணம் கொடுக்க மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையே திருச்செந்தூா் அருகே உள்ள எல்லப்பநாயக்கன் குளச்கரை மற்றும் சங்கிவிளையில் உள்ள தனியாா் தோட்டாக்களில் நிலத்தடி நீரை லாரிகளில் பிடித்து விற்பனை செய்யக் கூடாது என வருவாய் துறையினா் திடீா் தடை விதித்தனா்.
இதனால் தாங்கள் பாதிப்படைவதாக கூறி, லாரி உரிமையாளா்கள் தங்களது லாரிகளுடன் வட்டாட்சியா் அலுவலக மைதானத்தில் நிறுத்தி சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுப்பட்டனா். இது குறித்து திருச்செந்தூா் வட்டாட்சியா் ஞானராஜியிடம் முறையிட்டனா். ஆவா்களிடம் நடத்திய பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து தண்ணீா் பிடிக்க அனுமதியளித்ததையடுத்து லாரி உரிமையாளா்கள் போராட்டத்தை கைவிட்டனா்.