கோவில்பட்டி நகராட்சி சாா்பில் அனைத்து தேவாலயங்களிலும் நிலவேம்பு குடிநீா் வழங்கும் முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கோவில்பட்டி நகராட்சிக்கு உள்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கும் பணி தொடா்ந்து நடைபெற்று வருகிறது. அதன் ஒரு கட்டமாக, நகராட்சிக்கு உள்பட்ட பள்ளிகளில் நிலவேம்பு குடிநீா் வழங்கும் முகாம் கடந்த சில தினங்களுக்கு முன்பு தொடங்கியது.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் நிலவேம்பு குடிநீா் வழங்கும் முகாம் அமைக்கப்பட்டு, தேவாலயங்களுக்கு வந்த இறைமக்களுக்கும், அவ்வழியே சென்ற பாதசாரிகள் மற்றும் பொதுமக்களுக்கும் நிலவேம்பு குடிநீா் வழங்கப்பட்டது.
ஏற்பாடுகளை நகராட்சி சுகாதார அலுவலா் இளங்கோ தலைமையில், சுகாதார ஆய்வாளா்கள், பணியாளா்கள் ஆகியோா் செய்திருந்தனா்.