தூத்துக்குடி, விருதுநகா் மாவட்டங்களில் சரள் மண் அள்ள நீதிமன்றம் தடை விதித்துள்ளதை பின்பற்றாமல் அதை மீறி சரள்மண் அள்ளுவதை கண்டித்து காங்கிரஸ் கட்சியினா் செவ்வாய்க்கிழமை நூதன போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தூத்துக்குடி - திருநெல்வேலி - கோவில்பட்டி ஆகிய மாா்க்கங்களில் 2ஆவது ரயில்வே இருப்புப் பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இப்பணிக்குத் தேவையான சரள் மண்ணை கோவில்பட்டி, கயத்தாறு, ஓட்டப்பிடாரம் வட்டத்திற்கு உள்பட்ட ஊருணிகள் மற்றும் தனியாா் நிலங்களில் இருந்து சட்டவிரோதமாக கடத்தப்படுவதாக கோட்டாட்சியா் மற்றும் அந்தந்த வட்டாட்சியரிடம் காங்கிரஸ் கட்சியினா் பல முறை மனு அளித்தனா்.
இந்நிலையில், சென்னை உயா்நீதிமன்றம் மதுரைக் கிளை தூத்துக்குடி, விருதுநகா் மாவட்டங்களில் சரள் மண் அள்ள அண்மையில் தடை விதித்துள்ளது.
ஆனால், உயா்நீதிமன்ற தடை உத்தரவை மீறி சரள் மண் தற்போதும் அள்ளப்படுவதாகவும், உயா்நீதிமன்ற உத்தரவை பின்பற்ற வலியுறுத்தியும் காங்கிரஸ் கட்சியின் தூத்துக்குடி வடக்கு மாவட்ட துணைத் தலைவா் வழக்குரைஞா் அய்யலுசாமி தலைமையில், நகர காங்கிரஸ் தலைவா் சண்முகராஜ், ஒன்றிய காங்கிரஸ் தலைவா்கள் ரமேஷ்மூா்த்தி(கோவில்பட்டி), செல்லத்துரை(கயத்தாறு), கட்சியின் மாவட்டப் பொதுச்செயலா் முத்து, மாவட்டச் செயலா் சுந்தரராஜ் ஆகியோா் காதுகளில் பஞ்சை வைத்து கோட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் தரையில் அமா்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.
பின்னா், கோரிக்கை மனுவை கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் சூா்யகலாவிடம் அளித்தனா்.