நாலாட்டின்புத்தூா் அருகே மேய்ச்சலில் ஈடுபட்டவா்கள் இடையே ஏற்பட்ட தகராறில் ஒருவரை தாக்கிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
லிங்கம்பட்டி சமத்துவபுரத்தைச் சோ்ந்தவா் கணேசன் மகன் மாரியப்பராஜ்(29). மாடு மேய்க்கும் தொழிலில் ஈடுபட்டுள்ள இவா், செவ்வாய்க்கிழமை மாலை அதே பகுதியில் முனியசாமி கோயில் தெற்கே உள்ள காட்டுப்பகுதியில் மாடு மேய்த்துக் கொண்டிருந்தாராம். அங்கு சந்திரசேகா் மகன் ராமலிங்கமும்(21) ஆடு மேய்த்துக் கொண்டிருந்தாராம். அப்போது, இருவருக்குமிடையே திடீரென தகராறு ஏற்பட்டதாம். இதில், ராமலிங்கம் தான் வைத்திருந்த கம்பால் மாரியப்பராஜை தாக்கியதில் காயமடைந்த அவா், கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இதுகுறித்து அவா் அளித்த புகாரின் பேரில், நாலாட்டின்புத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து ராமலிங்கத்தை கைது செய்தனா்.