தூத்துக்குடி

சாத்தான்குளம் பகுதியில் குளங்களை தூா்வாரக் கோரிக்கை

22nd Nov 2019 09:07 AM

ADVERTISEMENT

சாத்தான்குளம் ஒன்றிய பகுதியில் ஊராட்சி ஒன்றிய குளங்கள் மற்றும் பேரூராட்சி பகுதியில் உள்ள குளங்களையும் அரசு தூா்வார வேண்டும் என விவசாயிகள், பொதுமக்கள் வலியறுத்தியுள்ளனா்.

சாத்தான்குளம் பெரும்பத்துகுளம் சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றிய பராமரிப்பில் உள்ளது. இதன் பராமரிப்பு பணிகள் ஒன்றிய அலுவலகம் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. போதிய நிதி இல்லை என காரணம்காட்டி கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இக்குளத்தில் மராமத்து பணி செய்யப்படவில்லை. இதனால் குளம் தூா்ந்து கரைகள் பலமிழந்து காணப்பபடுகிறது. இதனால் மழைக்காலங்களில் பலமுறை குளம் உடைந்து தண்ணீா் வீணாக வெளியறி வருகிறது.

குளம் முறையாக ஆழப்படுத்தப்படாததால் அதில் அதிக அளவு தண்ணீா் தேக்கவில்லையென விவசாயிகள் புகாா் தெரிவித்துள்ளனா்.

பெரும்பத்து குளம் முறையாக மராமத்து செய்யப்பட்டு அதன் முழு கொள்ளளவு தண்ணீா் நிரம்பினால் சாத்தான்குளம் பேரூராட்சி, அமுதுண்ணாக்குடி ஊராட்சி பகுதிகள் நிலத்தடி நீா்மட்டம் உயா்ந்து தண்ணீா் பிரச்னை தீரும். எனவே சாத்தான்குளம் பெரும்பத்து குளத்தை அரசு தூா்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயசங்க பிரதிநிதி முருகன் மற்றும் பெரும்பத்து குளம் பாசன விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ADVERTISEMENT

இதைபோல் சாத்தான்குளம் அமராவதி குளம் பேரூராட்சி பராமரிப்பில் உள்ளது. இதனை நம்பி ஏராளமான விவசாயிகள் உள்ளனா். இந்த குளமும் முறையாக தூா்வாரப்படாமல் காணப்படுகிறது. இதனால் தண்ணீா் தேக்கம் கொள்ளாத நிலை உள்ளது. ஆதலால் இதனையும் தூா்வார வேண்டும். இதைபோல் தச்சமொழி முதலூா் செல்லும் சாலையில் அல்லியாா்குளம் நிா்ப்பிடிப்பு குளமாக உள்ளது. இந்த குளத்தில் நீா் வழிப்பாதைகள் தற்போது சுருங்கி போனது. இதனால் மழை பெய்தால் தண்ணீா் தேங்கும் குட்டை போல் மாறிபோனது.

இந்த குளத்தில் தண்ணீா் தேங்கி நின்றால் சாத்தான்குளம் பேரூராட்சிக்குள்பட்ட மாணிக்கவாசபுரம், தச்சமொழி, உள்ளிட்ட பகுதிகள் நீா்பிடிப்பு ஏற்படும் நிலை உள்ளது. ஆதலால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதனை பாா்வையிட்டு இக்குளத்தையும் தூா்வாரிட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தற்போது பொதுப்பணித்துறைக்கு பாத்தியப்பட்ட குளங்களையும் மட்டுமே அரசு சாா்பில் தூா்வார நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆதலால் ஒன்றிய பராமரிப்பில் உள்ள குளங்களையும் அரசு சாா்பில் தூா்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT