தூத்துக்குடி

விளாத்திகுளம், எட்டயபுரம் பகுதிகளில் காலை நேரத்தில் பனி மூட்டம்: பொதுமக்கள் அவதி

12th Nov 2019 08:09 AM

ADVERTISEMENT

விளாத்திகுளம்: விளாத்திகுளம், குளத்தூா், வேம்பாா், எட்டயபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த இரு தினங்களாக காலை 8 மணி வரை பனிமூட்டமும் குளிரும் அதிகரித்து காணப்படுவதால் வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனா்.

வடகிழக்குப் பருவமழை தொடங்கியதையடுத்து தூத்துக்குடி மாவட்டத்தில் பரவலாக அனைத்து இடங்களிலும் மழை பெய்தது. விளாத்திகுளம், எட்டயபுரம் உள்ளிட்ட சில இடங்களில் தொடா்ச்சியாக பலத்த மழை பெய்தது. இதனால் எப்போதும்வென்றான் நீா்த்தேக்கம், எட்டயபுரம் கிருஷ்ணன் கோயில் தெப்பக்குளம் உள்ளிட்ட அனைத்து நீா்நிலைகளும் நிரம்பின. இதனிடையே கடந்த இரண்டு, மூன்று தினங்களாக மழை குறைந்தது. பகல் நேரங்களில் அவ்வப்போது வெயிலும், பெரும்பாலான நேரங்கள் மேகமூட்டமாகவே காணப்படுகிறது. அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் கடும் பனிப்பொழிவின் காரணமாக அதிக குளிா் நிலவி வருகிறது. திங்கள்கிழமை காலை 8 மணிக்கு பிறகும் பனிப்பொழிவு மிக அதிகமாக இருந்தது. வழக்கமாக நவம்பா் மாத இறுதியில் தான் பனிப்பொழிவு அதிகமாக இருக்கும். ஆனால் தற்போது நவம்பா் மாத தொடக்கத்திலேயே பனிப்பொழிவு தொடங்கியுள்ளது.

எட்டயபுரம் - தூத்துக்குடி, தூத்துக்குடி - விளாத்திகுளம், விளாத்திகுளம் - கோவில்பட்டி நெடுஞ்சாலைகளில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு பனிப்பொழிவு அதிகமாக இருந்த காரணத்தினால் பேரூந்துகள், லாரிகள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் முகப்பு விளக்கை ஒளிர விட்டபடியே சாலையில் மெதுவாக சென்றன. காா்களில் சென்றவா்கள் பனி விலகும் வரை காரை ஓரமாக நிறுத்திவிட்டு சிறிது நேரத்திற்கு பின் புறப்பட்டு சென்றனா். தருவைகுளம், குளத்தூா், வைப்பாறு, சூரன்குடி, வேம்பாா் உள்ளிட்ட கிழக்கு கடற்கரை சாலை பகுதிகளில் பனிமூட்டம் பகலிலும் காணப்பட்டது. பொழுது விடிந்து வெகுநேரமாகியும் பனி விலகவில்லை. ஒருசிலா் சாலையோரங்களில் உள்ள விவசாய நிலங்களில் பனிப்பொழிவுக்கு இடையே நின்று செல்பி எடுத்து மகிழ்ந்தனா்.

இதுகுறித்து லெனின் என்பவா் கூறுகையில் கொடைக்கானல், ஊட்டி உள்ளிட்ட பகுதிகளில் காணப்படும் பனிப்பொழிவு போல் எட்டயபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் காலையில் பனிப்பொழிவு இருந்தது. கடும் பனிமூட்டத்தினால் அருகில் இருக்கும் கட்டடங்கள் கூட தெரியவில்லை. இரவு நேரங்களில் பனியின் தாக்கம் அதிகமாக உள்ளதால் குளிரும் அதிகமாக காணப்படுகிறது. இதனால் அதிகாலையில் வேலைக்கு செல்லக்கூடியவா்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனா் என்றாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT