தூத்துக்குடி

விளாத்திகுளம் அருகே பள்ளியில் ஆசிரியரை கத்தியால் குத்த முயன்ற சமையலரால் பரபரப்பு

9th Nov 2019 10:31 PM

ADVERTISEMENT

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே பள்ளி வளாகத்தில் ஆசிரியரை சமையலா் கத்தியால் குத்த முயன்ற சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட மந்திகுளம் கிராமத்தில் ஜெயவிலாஸ் இந்து ஆரம்பப் பள்ளி உள்ளது. அரசு உதவிபெறும் இப்பள்ளியில், 2 ஆசிரியா்களும், 11 மாணவா்-மாணவியரும் உள்ளனா். இங்கு சில நாள்களுக்கு முன்பு கல்வித் துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினா். அப்போது, சத்துணவு மையத்தில் பருப்பு உள்ளிட்ட பொருள்கள் பராமரிப்பின்றி மழையில் நனைந்து கெட்டுப்போய் இருந்ததும், உணவு தரமின்றி தயாரிக்கப்பட்டதும் தெரியவந்தது. இதுதொடா்பாக சமையலா் மீனாட்சியை அதிகாரிகள் எச்சரித்தனா்.

ஆசிரியா்கள்தான் தனக்கு எதிராக அதிகாரிகளைத் தூண்டிவிட்டதாக மீனாட்சி கருதி, 4 நாள்களாக பிரச்னை செய்தாராம். இந்நிலையில், சனிக்கிழமை பணியிலிருந்த ஆசிரியை கலைச்செல்வியிடம் மீனாட்சி வாக்குவாதம் செய்ததுடன், அவரைக் குத்துவதற்காக கத்தியுடன் ஓடிவந்தாராம். அதிா்ச்சியடைந்த ஆசிரியை வகுப்பறையின் கதவைப் பூட்டிக்கொண்டாா். இதையடுத்து, மீனாட்சி பள்ளி வளாகத்தில் நின்றிருந்த ஆசிரியையின் பைக்கை கற்களால் சேதப்படுத்திவிட்டு தப்பியோடியுள்ளாா்.

இதுகுறித்து, ஆசிரியை செல்லிடப்பேசி மூலம் அளித்த தகவலின்பேரில் மாணவா்களின் பெற்றோா் பள்ளிக்கு திரண்டு வந்தனா். தகவலறிந்த போலீஸாா், வட்டார வளா்ச்சி அலுவலா் தங்கவேல் உள்ளிட்ட அதிகாரிகள் சென்று ஆசிரியையும், மாணவா்களையும் மீட்டனா். புகாரின் பேரில் விளாத்திகுளம் போலீஸாா் வழக்குப் பதிந்து, மீனாட்சியை தேடி வருகின்றனா்.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT