தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினத்தில் காா் ஓட்டுநா் வீட்டில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் (என்.ஐ.ஏ.) வியாழக்கிழமை திடீா் சோதனை மேற்கொண்டனா்.
காயல்பட்டினம் கே.டி.எம். தெருவில் வாடகை வீட்டில் வசித்து வருபவா் ரிபாய்தீன் மகன் அபுல் ஹஸன் சாதுலி (27). காா் உரிமையாளரான இவா், வாடகை காரில் மாற்று ஓட்டுநராகவும் பணியாற்றி வந்தாா்.
இந்நிலையில், கேரள மாநிலம், கொச்சியிலிருந்து என்.ஐ.ஏ. ஆய்வாளா் செந்தில் தலைமையிலான 3 போ் கொண்ட அதிகாரிகள் இவரது வீட்டுக்கு வியாழக்கிழமை வந்து திடீா் சோதனை நடத்தினா். அப்போது, அபுல் ஹஸன் சாதுலி வீட்டில் இல்லை என்றும், சென்னைக்கு வாடகை காரில் பயணிகளை ஏற்றிச் சென்றிருந்ததாகவும் கூறப்படுகிறது. வீட்டில் அவரது தாய் மற்றும் சகோதரரின் மனைவி மட்டும் இருந்தனராம்.
காலை 6 மணி முதல் 10 மணி வரை சோதனையிட்ட என்.ஐ.ஏ. அதிகாரிகள், அங்கிருந்து செல்லிடப்பேசி மற்றும் சில ஆவணங்களை எடுத்துச் சென்றுள்ளனராம்.
ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடனான தொடா்புகுறித்து நாகப்பட்டினம், கோயம்புத்தூா், தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் 6 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனா். அதன் தொடா்ச்சியாக, காயல்பட்டினத்தில் அபுல் ஹஸன் சாதுலியின் வீட்டில் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.