தூத்துக்குடி

மழைநீர் சேமிப்புத் திட்டத்தில் ஆர்வம் வேண்டும்: கிராமசபையில் ஆட்சியர் அறிவுறுத்தல்

29th Jun 2019 07:22 AM

ADVERTISEMENT

நிலத்தடி நீராதாரத்தைப் பாதுக்காக்கும் வகையில், மழைநீர் சேகரிப்புத் திட்டத்தில் மக்கள் ஆர்வப்பட வேண்டும் என்றார் ஆட்சியர் சந்தீப் நத்தூரி.
தூத்துக்குடி ஒன்றியம், வர்த்தகரெட்டிபட்டி ஊராட்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கிராமசபை கூட்டத்துக்கு தலைமை வகித்து ஆட்சியர் பேசியது:
தேசிய அளவில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15, ஜனவரி 26, மே 1, அக்டோபர் 2 ஆகிய தினங்களில்  பொதுமக்கள் பங்களிப்புடன் கிராமசபை கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. மே 1ஆம் தேதி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்ததால்,  அரசு உத்தரவுப்படி ஜூன் 28இல் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் கிராமசபை கூட்டம் நடத்தப்படுகிறது. 
கிராம ஊராட்சியின் வரவு- செலவு கணக்கு மற்றும் முக்கிய திட்டங்கள், வளர்ச்சி திட்டங்கள் குறித்து பொதுமக்கள் ஒப்புதலுடன் முடிவுகள் எடுக்கப்படுகின்றன. மேலும், விவசாயிகளுக்கு ரூ.6000 வெகுமதி வழங்கும் திட்டத்தின்கீழ், கிராம நிர்வாக அலுவலகங்களில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு விவசாயிகளின் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம் சனிக்கிழமை (ஜூன் 29) நடைபெற உள்ளது. முழு சுகாதார திட்டத்தின்கீழ் அனைத்து இல்லங்களிலும் தனிநபர் கழிப்பிடம் கட்டுவதற்கான நடவடிக்கை மற்றும் கழிப்பிடம் கட்ட இடம் இல்லாதவர்களுக்கு சமுதாய கழிப்பிடம் கட்டித்தரவும், ஏற்கெனவே சமுதாய கழிப்பிடம் இருந்தால் பராமரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். 
தமிழக அரசு ஜனவரி 1 முதல் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்கும் வகையில் தடை உத்தரவு வழங்கியுள்ளது. பிளாஸ்டிக்குக்கு மாற்று பொருள்களை மக்கள் அறிந்துகொள்ளும் வகையில் இங்கு கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. ஜல் சக்தி அபியான் திட்டத்தின் மூலம் குடிநீர் சிக்கனம், நிலத்தடி நீரைப் பாதுகாத்தல், மழைநீர் சேகரித்தல், கிராம குட்டைகளை அமைத்து பராமரித்தல், ஊராட்சியின் மூலம் கழிவு நீர் சுத்திகரிப்பு செய்து பாசனத்திற்கு பயன்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. 1990ஆம் ஆண்டு முதல்  மழைநீர் சேகரிப்பு திட்டம் தொடங்கப்பட்டது. அந்தத் திட்டத்தை கடைப்பிடிக்க மக்கள் ஆர்வப்பட வேண்டும். அதை, அனைவரும் மழைநீர் சேமிப்பு இயக்கமாக மாற்ற வேண்டும் என்றார் அவர்.
தொடர்ந்து சமுதாய நலக்கூடம் மற்றும்  புதிதாக அமைக்கப்பட்ட மழைநீர் சேகரிப்பு தொட்டியை பார்வையிட்டதுடன், மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட ஆட்சியர், பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டுவைத்தார்.
தீர்மானங்கள்: முன்னதாக, குடிநீர் சிக்கனம், மழைநீர் சேகரிப்பு, ஊராட்சி செலவின கணக்கு பராமரித்தல், டெங்கு ஒழிப்பு, கிராம ஊராட்சியில் செயல்படுத்தப்படும் திட்டங்கள், பிளாஸ்டிக் ஒழிப்பு, பசுமை வீடுகள் திட்டத்தில் பயனாளிகள் தேர்வு, முழு சுகாதார திட்டத்தின்கீழ் கழிப்பறைகள் பயன்படுத்துபவர்களை பாராட்டுதல், சுகாதார வளாகம் பராமரித்தல் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் மக்கள் முன்னிலையில் நிறைவேற்றப்பட்டன. 
கூட்டத்தில்  தூத்துக்குடி சார் ஆட்சியர் சிம்ரான் ஜீத் சிங் கலோன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தனபதி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) உமாசங்கர், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் முத்துலட்சுமி, உதவி ஆணையர் (கலால்) சுகுமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) பாலசுப்பிரமணியன், சமூகப் பாதுகாப்புத் திட்ட துணை ஆட்சியர் சங்கர நாராயணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கெலன் பொன்மனி, ஜெயந்தி மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
விளாத்திகுளம் ஒன்றியத்தில்...
 விளாத்திகுளம் ஒன்றியம் அரியநாயகிபுரம், மேல்மாந்தை, தத்தனேரி ஆகிய கிராமங்களில் கிராம சபை கூட்டங்கள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.  
இக்கூட்டங்களில்  வட்டார வளர்ச்சி அலுவலர் தங்கவேல் தலைமை வகித்து, அரசுத் திட்டங்களை எடுத்துக்கூறினார்.  குடிநீரை சிக்கனமாக  பயன்படுத்தல், அனைத்து வீடுகளிலும் மழைநீர் சேமிப்பு கட்டமைப்பை ஏற்படுத்துதல், பிளாஸ்டிக் பொருள்களை தவிர்த்தல், கழிப்பறைகளை பயன்படுத்துதல், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை பின்பற்றுதல் உள்ளி  நிறைவாக 50க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் ஊருணி கரையோரம் நடப்பட்டது.  கூட்டத்தில் கிராம மக்கள், சுயஉதவி குழு உறுப்பினர்கள், உள்ளாட்சி  முன்னாள் பிரதிநிதிகள்  கலந்து கொண்டனர். 
ஆழ்வார்திருநகரி  ஒன்றியம் அங்கமங்கலம் ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்துக்கு, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஞானசேகரன் தலைமை வகித்தார்.  உதவி வேளாண் அலுவலர் முத்துமாரி ,  உதவி தொழில்நுட்ப மேலாளர் நளினி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  இக்கூட்டத்தில், குழந்தைகள் பாதுகாப்பு, மகளிர் திட்டம், குடிநீர் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் பற்றி விவாதிக்கப்பட்டது. இதில்,கிராம மக்கள் திரளாக கலந்துகொண்டனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT