தூத்துக்குடி

கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முற்றுகை

31st Jul 2019 07:27 AM

ADVERTISEMENT

கோவில்பட்டியையடுத்த இலுப்பையூரணி ஊராட்சிக்கு உள்பட்ட அனைத்துப் பகுதிகளுக்கும் சீராக தண்ணீர் வழங்கக் கோரி அப்பகுதி பொதுமக்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனர். 
இலுப்பையூரணி ஊராட்சிக்கு உள்பட்ட என்.ஜி.ஓ. காலனி பழந்தோட்ட நகர் கைவண்டி தொழிலாளர் காலனி உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களுக்குத் தேவையான தண்ணீர் கடந்த 6 மாதங்களாக கிடைக்கவில்லையாம்.  எனவே, இப்பகுதி பொதுமக்களுக்கு  சீரான குடிநீர் வழங்க வேண்டும். சீவலப்பேரி கூட்டுக் குடிநீர் திட்டத்தின்கீழ் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திமுக விவசாய அணி துணை அமைப்பாளர் சந்தானம் தலைமையில் அப்பகுதி பெண்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். பின்னர், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (நிர்வாகம்)  சிவராமகிருஷ்ணனிடம் கோரிக்கை மனு அளித்தனர். 
மனுவைப் பெற்றுக் கொண்ட அவர்,   தங்கள் பகுதியை முறையாக ஆய்வு செய்து, ஊராட்சி ஒன்றிய பொது நிதியின் மூலம் சீரான குடிநீர் கிடைக்க வழிவகை செய்யப்படும் எனக் கூறியதையடுத்து போராட்டக் குழுவினர் கலைந்து சென்றனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT