பசுவந்தனை அருகே தேசிய உணவு பாதுகாப்பு இயக்கத்தின்கீழ் விவசாயிகளுக்கு உளுந்து, பாசிபயறு சாகுபடி குறித்து தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்பட்டது.
ஓட்டப்பிடாரம் வட்டம், பசுவந்தனையை அடுத்துள்ள குதிரைக்குளத்தில் பயறு வகைப் பயிர்களில் உயர் சாகுபடி தொழில் நுட்ப முறைகள் குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சிக்கு தலைமை வகித்த வேளாண் உதவி இயக்குநர் சரவணன், தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வழங்கப்படும் மானிய திட்டங்கள், நுண்ணீர் பாசனத் திட்டம், பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம் குறித்து விளக்கினார்.
தூத்துக்குடி மாவட்ட விதை சான்றளிப்பு துறை உதவி இயக்குநர் அசோகன், உளுந்து மற்றும் பாசி பயறு பயிர்களில் ரகங்கள் தேர்வு , விதை பண்ணை அமைக்கும் வழிமுறைகள் குறித்தும் விளக்கினார். வேளாண் அலுவலர் சுனில் கெளசிக், உளுந்து மற்றும் பாசி பயறு பயிர்களில் விதை நேர்த்தி , உர மேலாண்மை , பயிர் இடைவெளி பராமரித்தல் போன்ற தொழில் நுட்பங்கள் குறித்தும், அட்மா திட்ட தொழில் நுட்ப மேலாளர் மக்காச் சோள படைபுழு மேலாண்மை குறித்தும் பயிற்சி அளித்தனர். பயிற்சிக்கான ஏற்பாடுகளை அட்மா உதவி தொழில் நுட்ப மேலாளர் செல்வகுமார் செய்திருந்தார்.