தூத்துக்குடி மாவட்ட குடிநீர் தேவைக்காக பாபநாசம் அணையில் இருந்து கூடுதலாக 50 கனஅடி தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி.
இதுகுறித்து திங்கள்கிழமை அவர் அளித்த பேட்டி:
தமிழக அரசின் குடிமராமத்து திட்டத்தின்கீழ், தூத்துக்குடி மாவட்டத்தில் கண்மாய்கள், குளங்கள் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமை சார்பில், 505 குளங்களை தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. மத்திய அரசின் ஜல்சக்தி திட்டத்தின் கீழ், பரிவல்லிக்கோட்டை, சாத்தான்குளம், உடன்குடி, இளையரசநேந்தல் ஆகிய 4 குறுவட்ட பகுதிகளில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உடன்குடி அனல்மின் நிலைய திட்டத்துக்கு கடல்நீரில் இருந்து தண்ணீர் எடுப்பதற்காக 8 கி.மீ. தொலைவுக்கு பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. தற்போது 1 கி.மீ. தொலைவு பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியில் குடிநீர் விநியோகத்தை சரிசெய்யும் பணி நடைபெற்று வருகிறது. குடிநீர் தேவைக்காக பாபநாசம் அணையில் இருந்து தற்போது விநாடிக்கு 300 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மேலும், விநாடிக்கு 50 கன அடி தண்ணீர் திறந்துவிட திருநெல்வேலி மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.
சில இடங்களில் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. அதை சரிசெய்யும் பணி நடைபெற்று வருகிறது. முறைகேடாக குடிநீர் இணைப்பு எடுத்தவர்கள் மீது மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. இன்னும் ஒருசில தினங்களில் குடிநீர் பிரச்னை சீரடைந்து 3 நாள்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்யப்படும் என்றார் அவர்.
தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில், 5 பயனாளிகளுக்கு ரூ. 17,865 மதிப்பில் விலையில்லா தையல் இயந்திரம், சமூக பாதுகாப்புத் துறையின் கீழ், ஆதரவற்ற மாணவி ரா. மகேஸ்வரிக்கு கல்வி உதவித்தொகையாக மாவட்ட ஆட்சியரின் விருப்புரிமை நிதியிலிருந்து ரூ. 25,000-க்கான காசோலை, ஒக்கி புயலில் காணாமல்போய் இறந்துவிட்டதாக உறுதிசெய்யப்பட்ட மரிய பாரத் பெனில் என்பவரின் தாய் சுதாவுக்கு மீன்வளத் துறையின் மூலம் ரூ. 10 லட்சத்துக்கான காசோலை, வழங்கல் துறையின் மூலம் 5 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகள், ஓய்வூதியருக்கு மருத்துவ காப்பீட்டுத் தொகையாக ரூ. 74,000-க்கான காசோலை என மொத்தம் 13 பயனாளிகளுக்கு ரூ. 11,16,865 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வழங்கினார்.
நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் மு. வீரப்பன், தூத்துக்குடி சார் ஆட்சியர் சிம்ரான் ஜீத் சிங் கலோன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தனபதி, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் கவிதா, சமூக பாதுகாப்பு திட்ட துணை ஆட்சியர் (பொ) சுகுமார், மாவட்ட வழங்கல் அலுவலர் அமுதா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஜோதிகுமார், மீன்வளத் துறை உதவி இயக்குநர் பாலசரஸ்வதி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்கு) கிறிஸ்டி, துணை ஆட்சியர் (பயிற்சி) சுப்புலட்சுமி மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.