ஆதரவற்ற விதவை சான்றிதழை முறையாக வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ் விவசாயிகள் சங்கத்தினர் கோட்டாட்சியர் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனர்.
விளாத்திகுளம் மற்றும் எட்டயபுரம் வட்டத்திற்கு உள்பட்ட தாப்பாத்தி, கீழ்நாட்டுக்குறிச்சி, பல்லாகுளம் உள்பட பல்வேறு பகுதிகளில் வைப்பாற்றின் கரையோரமுள்ள தனியார் பட்டா நிலங்களில் சவுடு மண் என்ற பெயரில் அனுமதி பெற்று, சட்ட விரோதமாக ஆற்று மணல் அள்ளுவதை தடுக்க வேண்டும், ஆதரவற்ற விதவை சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்துள்ளவர்களுக்கு முறையாக விசாரணை செய்து காலதாமதமின்றி உடனே வழங்க வேண்டும், நிலுவையில் உள்ள விவசாயிகளின் பட்டா மாற்ற கோரிக்கை மனுக்களை உடனடியாக பரிசீலனை செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ் விவசாயிகள் சங்கத்தினர் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
, தமிழ் விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் ஓ.ஏ.நாராயணசாமி தலைமை வகித்தார். இந்திய குடியரசு கட்சியின் மாநிலத் தலைவர் சூசை கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். இதில், தமிழ் விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவர் நம்பிராஜன், மாவட்டத் தலைவர் நடராஜன், துணைத் தலைவர் சாமியா, விளாத்திகுளம் வட்டத் தலைவர் கோபாலகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர், போராட்டக்குழுவினருடன் வட்டாட்சியர் மணிகண்டன் பேச்சு வார்த்தை நடத்தினார். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற முற்றுகை போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.