தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகேயுள்ள குளத்தூரில் பெற்றோரின் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்துகொண்ட தம்பதி வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில், பெண்ணின் தந்தையை கைது செய்த போலீஸார் அவரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர்.
குளத்தூர் கிழக்குக் கடற்கரை சாலை பெரியார் நகரைச் சேர்ந்தவர் திருமணி மகன் சோலைராஜா (24). குளத்தூர் அருகே பல்லாகுளத்தைச் சேர்ந்தவர் அழகர் மகள் பேச்சியம்மாள் என்ற ஜோதி (21). இவர்கள் இருவரும் அப்பகுதியில் உள்ள உப்பளத்தில் பணியாற்றிய போது காதலித்துள்ளனர். இதையறிந்த ஜோதியின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அவர்களின் எதிர்ப்பை மீறி காதல் ஜோடி கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் செய்துகொண்டது.
திருமணத்துக்குப் பிறகு, சோலைராஜா தனது மனைவி ஜோதியுடன் பெரியார் நகரில் உள்ள வீட்டில் தனியாக வசித்துவந்தார். இந்நிலையில், கடந்த 4 ஆம் தேதி அதிகாலை தம்பதி இருவரும் வீட்டுக்கு வெளியே முற்றத்தில் தூங்கிக் கொண்டிருந்தபோது, மர்ம நபர்கள் அவர்களை வெட்டிக் கொன்றுவிட்டு தப்பியோடிவிட்டனர்.
இது தொடர்பாக குளத்தூர் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி, பெண்ணின் தந்தை அழகரை கைது செய்தனர். அவர்மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதால், அழகரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய குளத்தூர் காவல் ஆய்வாளர் ராமலட்சுமி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பால கோபாலனுக்குப் பரிந்துரைத்தார்.
இதைத்தொடர்ந்து, மாவட்ட காவல் துறை பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, வழக்கில் தொடர்புடைய அழகரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைதுசெய்ய உத்தரவிட்டார். இதையடுத்து, அழகரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்த போலீஸார், அவரை பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.