தூத்துக்குடியில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தின் போது ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தியும், குடிநீர் வசதி கேட்டும் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் ஆட்சியர் சந்தீப் நந்தூரி கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். அப்போது, தூத்துக்குடி திரேஸ்புரம் முத்தரையர் காலனி பொதுமக்கள் மற்றும் சங்குகுளி தொழிலாளர்கள் ஆட்சியரிடம் அளித்த மனு : திரேஸ்புரம் அருகேயுள்ள முத்தரையர் காலனி வடக்கு பகுதியில் உள்ள காலியிடத்தை மீனவர்கள் மீன்பிடி பைபர் படகுகள், வள்ளங்களை பழுது பார்க்கவும், மீன் பிடி வலைகளை உலர்த்தவும் பயன்படுத்தி வருகின்றனர். அதோடு விநாயகர் சதுர்த்தி காலங்களில் அந்த இடத்தில் தான் மாநகரிலுள்ள விநாயகர் சிலைகள் கொண்டுவந்து வைக்கப்பட்டு அதன்பின்பு கடலில் கரைக்கப்படுகிறது.
தற்போது அந்த இடத்தை சிலர் ஆக்கிரமித்து வருகின்றனர். இதனால் வரும் காலங்களில் இந்த காலியிடத்தினை மீனவர்கள், சங்குகுளி தொழிலாளர்கள், பக்தர்கள், பொதுமக்கள் யாரும் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே அரசுக்குச் சொந்தமான அந்த காலியிடத்தை தனிநபர்களின் ஆக்கிரமிப்புகளில் இருந்து மீட்டு பாதுகாத்திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடிநீர் கேட்டு மனு: தூத்துக்குடி மாநகராட்சி ஜெய்லானி தெரு இஸ்லாமிய பெண்கள் ஆட்சியரிடம் அளித்த மனு: கடந்த இரண்டுமாத காலமாக தங்கள் பகுதிக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. இதனால் நாங்கள் குடிப்பதற்கு குடிநீர் இல்லாமல் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளோம். எனவே எங்கள் பகுதிக்கு உடனடியாக தட்டுப்பாடு இல்லாமல் சீராக குடிநீர் வழங்கிடவேண்டும் என்று கூறியுள்ளனர்.
இதுபோன்று, கங்கா பரமேஸ்வரி காலனிக்கு தட்டுப்பாடு இல்லாமல் குடிநீர் வழங்கவேண்டும் என்றும், கிருஷ்ணராஜபுரம் பகுதி மக்கள் குடிநீர் சீராக வழங்குவதுடன், மழைநீர் செல்வதற்கு ஏதுவாக வடிகால் வசதி செய்து தரவேண்டும். பன்றி தொல்லையை கட்டுப்படுத்திட துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனு அளித்தனர்.
குடிநீர் தட்டுப்பாடு: ஜனநாயக மக்கள் உரிமைக் கழகத்தின் தூத்துக்குடி மத்திய மாவட்டத் தலைவர் என். மகாராஜன் அளித்த மனு: தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை உடனடியாக சீரமைக்க வேண்டும், மாநகரப் பகுதியில் தேவையற்ற அடிபம்புகளை அகற்ற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.