உடன்குடி, ஓட்டப்பிடாரம் வட்டார வளமையம் சார்பில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் புதன்கிழமை(ஜூலை.31)நடைபெறுகிறது.
உடன்குடி கிறிஸ்தியாநகரம் டிடிடிஏ பள்ளியில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெறும், இந்த முகாமில் மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கு தேசிய ஊனமுற்றோருக்கான அடையாள அட்டை, ஆதார் புகைப்படம் எடுத்தல், கல்வி உதவித் தொகை படிவம், மூன்று சக்கர சைக்கிள், சக்கர நாற்காலி வழங்கல், விரிவான காப்பீட்டுத் திட்ட அட்டை, கார்னர் சேர் ,ஊன்றுகோல், மூக்கு கண்ணாடி, செவித்துணைக்கருவி, பராமரிப்பு உதவித்தொகை படிவம், இலவச அறுவை சிகிச்சை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும். பல்வேறு பயிற்சிகளும் அளிக்கப்படும்.
இதில் பங்கேற்க விரும்பும் பயனாளிகள் பத்து புகைப்படங்கள், ரேஷன் அட்டை, ஆதார் அட்டை நகல்கள் கொண்டு வர வேண்டும். இது குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் உடன்குடியில் நகர, ஊராட்சிப் பகுதிகளில் விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது. இதில் ஒன்றிய மேற்பார்வையாளர்(பொறுப்பு) சகுந்தலா, ஒருங்கிணைப்பாளர் ஜெயஸ்ரி மற்றும் சிறப்பாசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள் கலந்து கொண்டனர்.
ஓட்டப்பிடாரம்: இதே போல் ஓட்டப்பிடாரம் வட்டார வள மையத்தில் புதன்கிழமை மாற்றுத் திறன் குழந்தைகளுக்கான மருத்துவ முகாம் நடைபெறுகிறது. இம் முகாமில் 18 வயது வரையிலான அனைத்து மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கும் சிகிச்சை அளிக்கப்பட உள்ளது.
கண், காது, மனநலம், எலும்பு மூட்டு சிகிச்சை உள்ளிட்ட அனைத்து மருத்துவர்களாலும் பரிசோதனைகள் செய்யப்படுகிறது. மேலும் அவர்களுக்கான இலவச அடையாள அட்டை, இலவச அறுவை சிகிச்சை, பேருந்து பயண அட்டை, கல்வி உதவித்தொகை, சக்கர நாற்காலி போன்ற அனைத்து நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படும். அனைத்து மாற்றுத்திறனாளி குழந்தைகளும் இம்முகாமில் கலந்துகொண்டு பயன்பெறும்படி ஓட்டப்பிடாரம் வட்டார வள மையம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.