திருச்செந்தூரில் சாலையில் சுற்றித்திரிந்த மாடுகளை பேரூராட்சி பணியாளர்கள் பிடித்து கோசாலையில் ஒப்படைத்தனர். அதில், தனது மாட்டை ஒப்படைக்குமாறு பால் வியாபாரி குடும்பத்துடன் பேரூராட்சி அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை தர்னாவில் ஈடுபட்டார்.
திருச்செந்தூர் பேரூராட்சியில் மக்களை அச்சுறுத்தும்விதமாகவும், போக்குவரத்துக்கு இடையூறாகவும் சுற்றித்திரிந்த 7 மாடுகளை பேரூராட்சிப் பணியாளர்கள் வியாழக்கிழமை பிடித்து குலசேகரன்பட்டினத்தில் உள்ள கோசாலையில் ஒப்படைத்தனர்.
இந்நிலையில், திருச்செந்தூர் வீரராகவபுரம் தெருவைச் சேர்ந்த பால் வியாபாரி மாரியப்பன் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் கையில் பெட்ரோல் கேனை ஏந்தியபடி பேரூராட்சி அலுவலகத்திற்கு வெள்ளிக்கிழமை வந்தார். அவர், தங்கள் வீட்டு வாசலில் நின்றிருந்த மாடுகளை பேரூராட்சி நிர்வாகத்தினர் பிடித்துச் சென்றுவிட்டதாகவும், அவற்றை தன்னிடம் ஒப்படைக்கக் கோரியும் தர்னாவில் ஈடுபட்டார். இதை அறிந்த மற்ற மாடுககளின் உரிமையாளர்களும் அங்கு திரண்டதால் பரபரப்பு நிலவியது. இதையடுத்து, பேரூராட்சி செயல் அலுவலர் நாகராஜன், திருக்கோயில் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் வந்து பேச்சு நடத்தினர். அப்போது, முறைப்படி விசாரித்து மாடுகள் அவரவர் வசம் ஒப்படைக்கப்படும் என தெரிவித்தனர். இதையேற்று, அவர்கள் கலைந்து சென்றனர்.
கால்நடைகள் ஒப்படைப்பு: இதைத் தொடர்ந்து மாலையில், கோசாலையிலிருந்து மாடுகளை விடுவித்து, 3 பேருக்குச் சொந்தமான 7 மாடுகளுக்கும் கோசாலை கட்டணம் ரூ. 3500, பேரூராட்சி அபராத கட்டணம் ரூ. 1500 என ரூ. 5,000 வசூலிக்கப்பட்டு மாடுகள் ஒப்படைக்கப்பட்டன.