சாத்தான்குளம் பகுதியில் நடைபெற்று வரும் குடிமராமத்துப் பணிகளை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வெள்ளிக்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
சாத்தான்குளம் வட்டம், சாத்தான்குளத்தில் உடையார்குளத்தில் குடிமராத்துப் பணிகள் மேற்கொள்ள ரூ. 29.60 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகளுடன் இக்குளத்தை தூர் வாருதல், கரை, மதகு , மறுகால் மடை மற்றும் பாசன மடைகள் ஆகியவை சீரமைக்கும் பணிகளும், அமுதுண்ணாக்குடிகுளத்தில் ரூ. 42.50 லட்சத்தில் மதகு, கலுங்கு, கரை போன்றவை சீரமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
இப்பணியினை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வெள்ளிக்கிழமை பார்வையிட்டு ஆய்வுமேற்கொண்டார். அப்போது குளத்தின் கரை மற்றும் மதகு பணியை தரமாக மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.
உடையார்குளம் மராமத்துப் பணிகளை பார்வையிட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் உடையார்குளத்தில் காணப்படும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து, ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என ஆட்சியர் உறுதி அளித்தார்.
பின்னர், உடன்குடி அருகே சடையனேரி குளத்தில் நடைபெற்று வரும் குடிமராமத்துப் பணியை ஆட்சியர் ஆய்வு செய்தார்.
அப்போது, சாத்தான்குளம் வட்டாட்சியர் ஞானராஜ், ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் செல்வி, அதிகாரிகள் , விவசாயிகள் உடனிருந்தனர்.