தூத்துக்குடி

வாகன ஓட்டிகள் சாலைப் பாதுகாப்பு விதிகளைகடைப்பிடிக்க மாணவிகள் வலியுறுத்த வேண்டும்: எஸ்.பி.

18th Jul 2019 12:37 AM

ADVERTISEMENT


இருசக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிந்தும், நான்கு சக்கர வாகன ஓட்டிகள் சீட் பெல்ட் அணிந்தும் வாகனங்களை இயக்க மாணவிகள் வலியுறுத்த வேண்டும் என்றார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன்.
தூத்துக்குடி தூய மரியன்னை பெண்கள் கல்லூரியில் நடைபெற்ற சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கில் அவர் பேசியது:  அனைவரும் சாலை விதிகளை அறிந்து, அவற்றை மதித்து விழிப்புடன் செயல்படவேண்டும். இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் அனைவரும் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும். 
18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் எந்த வாகனங்களும் ஓட்டக்கூடாது. 18 வயதுக்கு மேல் உள்ளவர்கள் உரிமம் பெற்ற பிறகே ஓட்ட வேண்டும். தலைக்கவசம் அணிவது மற்றும் நான்கு சக்கர வாகனத்தில் சீட் பெல்ட் அணிந்து செல்வதன் முக்கியத்துவத்தை மாணவிகள் தெரிந்துகொள்வதோடு மட்டுமல்லாமல், தங்களது நண்பர்கள், குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவருக்கும் எடுத்துரைத்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றார் அவர்.
நிகழ்ச்சியில்,  கல்லூரி முதல்வர் லூசியா ரோஸ், துணை முதல்வர் ஷிபானா, மாவட்ட சாலை போக்குவரத்து தலைமை காப்பாளர் ஜட்சன், வடபாகம் காவல் ஆய்வாளர் பார்த்திபன், உதவி ஆய்வாளர் சுந்தரம், தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் பேச்சிமுத்து, காவல் துறை மக்கள் தொடர்பு அலுவலர் சத்திய நாராயணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT