கோவில்பட்டி கல்வி மாவட்டத்திற்கு உள்பட்ட 7 பள்ளிகளைச் சேர்ந்த 2,042 மாணவ, மாணவியருக்கு அரசின் விலையில்லா மடிக்கணினியை அமைச்சர் கடம்பூர் செ.ராஜு திங்கள்கிழமை வழங்கினார்.
கம்மவார் பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலுவலர் மு.வீரப்பன் தலைமை வகித்தார். பள்ளிச் செயலர் பெ.கதிர்வேல், அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி இசை ஆசிரியை அமலபுஷ்பம் ஆகியோர் பேசினர்.
கோட்டாட்சியர் விஜயா, நகராட்சி ஆணையர் அச்சையா, மாவட்ட கல்வி அலுவலர் மாரியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அமைச்சர் கடம்பூர் செ.ராஜு, கம்மவார் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, வ.உ.சி. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, ஆயிர வைசிய மேல்நிலைப் பள்ளி, லக்குமி ஆலை மேல்நிலைப் பள்ளி, காமநாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி, ஊத்துப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி ஆகிய 7 பள்ளிகளில் பிளஸ் 1 , பிளஸ்2 பயிலும் 2,042 மாணவ, மாணவியருக்கு அரசின் விலையில்லா மடிக்கணினியை வழங்கினார்.
நிகழ்ச்சியில், சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் மல்லிகா, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் சீனி, தலைமையாசிரியர்கள் சீனிவாசன், முனியசாமி, நீலமேகம், சண்முகராஜ், ரவிமாணிக்கம், கம்மவார் பெண்கள் மேல்நிலைப் பள்ளித் தலைவர் குருசாமி, நிர்வாகக் குழு உறுப்பினர்கள் ஆழ்வார்சாமி, சுந்தரராஜ், ஊராட்சி ஒன்றிய ஆணையர் கிரி, வட்டார வளர்ச்சி அலுவலர் மாணிக்கவாசகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஞானகெளரி வரவேற்றார். கம்மவார் பெண்கள் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியை விக்னேசுவரி நன்றி கூறினார்.